தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கொடூரமான அரச பயங்கரவாதம்: திருமாவளவன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அதிமுக அரசுக்கு பொறுப்பு இல்லையா என விசிக தலைவர் திருமாவளவன் எம்பி கேள்வியெழுப்பியுள்ளார்.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்களும், சில இயக்கங்களும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தன. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற இந்த போராட்டம் 100வது நாளை எட்டிய நிலையில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்னே பெருமளவு மக்கள் திரண்டு ஆலைக்கு எதிராக முழக்கமிட்டனர். இதில் வன்முறை வெடித்ததாக காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சம்பவம் குறித்து விசாரணை நடத்த அப்போதைய அதிமுக அரசு சார்பில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் சார்பில் நேற்று விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் காவல்துறை அதிகாரிகள் உட்பட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். தற்போது இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையை இன்று சட்டப்பேரவையில் வைத்ததற்காகவும், ஆணையத்தின் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்திருப்பதற்காகவும் தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம்.

துப்பாக்கிச் சூட்டின் விளைவாக இறப்பு, காயங்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து ஆராய்வது; காவல்துறையின் தகுதியான படை பயன்படுத்தப்பட்டதா? துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னர் உரிய அனைத்து முன்னெச்சரிக்கை நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டனவா? போன்றவற்றை ஆராய்வது என வரையறுக்கப்பட்ட ஆய்வு வரம்புகளின் அடிப்படையில் விசாரித்து ஆணையம் முன்வைத்த பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலைத் தருகிறது.

காவல்துறையினர் அத்துமீறி செயல்பட்டிருந்தால் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய வேண்டும் என்றும் அத்துமீறி செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் யார் யார்? உயிரிழப்பை ஏற்படுத்தியவர்கள் யார்? யார்? என்பதைப் பற்றியெல்லாம் விசாரணை ஆணையம் விரிவாக ஆராய்ந்து ஆதாரப்பூர்வமாக அறிக்கை அளித்துள்ளது. குறிப்பாக, குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு குந்தகமின்றி காவல் துறை அலுவலர்கள் 17 பேர் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது பரிந்துரை செய்திருக்கிறது. அதனடிப்படையில், குற்றமிழைத்த அதிகாரிகளுக்கு எதிராகத் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென முடிவு செய்துள்ள தமிழ்நாடு அரசு, ‘தொடர்புடைய துறைகளால் பொருத்தமான ஆணைகளை வழங்குவதற்காக மேலும் விரிவாக ஆய்வு செய்யப்படலாம்’ என்றும் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளது. படுகொலைக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கைகளைக் காலம் தாழ்த்தாமல் எடுக்கும் அதே வேளையில், அவர்கள் மீது ஆணையம் பரிந்துரைத்தவாறு குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கும் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இறந்து போனவர்கள் மற்றும் காயம் பட்டவர்கள் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட வேண்டிய இழப்பீடு தொடர்பாக ஆணையும் அளித்திருக்கும் பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம். இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் மீண்டும் நிகழாமல் இருப்பதற்குத் தகுந்த நடவடிக்கைகளை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அவற்றையும் கவனத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகிறோம்.

இவ்வளவு கொடூரமான அரசப்பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் மட்டுமே பொறுப்பாகும் என்று சொல்ல முடியாது. அன்றைய ஆட்சியாளர்களுக்கு அதில் எந்த தொடர்பும் இல்லையா? அப்போதைய அரசு வெறுமென வேடிக்கை மட்டும்தான் பார்த்ததா? குறிப்பாக, காவல்துறைக்குப் பொறுப்பாக இருந்த அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எந்தப் பொறுப்பேற்பும் இல்லையா? போன்ற வினாக்களுக்கெல்லாம் விடைதேடும் வகையில் தமிழ்நாடு அரசு புலனாய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.