திமுக செய்திதொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணனை அதிரடியாக நீக்கிய துரைமுருகன்!

திமுக செய்திதொடர்பாளர் கே எஸ் ராதாகிருஷ்ணன் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தலைவர் தேர்தலில் சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் போட்டியிட்டனர். காங்கிரஸ் தலைவர் பதவியில் போட்டியிட ராகுல் காந்தி விரும்பவில்லை. அதேபோல் காங்கிரஸ் இடைக்கால தலைவர் பதவியில் நீடிக்க சோனியா காந்தியும் விரும்பவில்லை. இதையடுத்து நேரு குடும்பத்தை சேராத ஒருவர் இந்த முறை தலைவராகும் வாய்ப்பு ஏற்பட்டது. சசி தரூர், மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் போட்டியிட்டனர். இதில் மல்லிகார்ஜுனா கார்கேவிற்கு சோனியா காந்தி மற்றும் அவரது ஆதரவாளர்களின் ஆதரவு இருப்பதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதாவது கார்கே வெற்றிபெற்றால் அவர் சோனியா – ராகுல் ஆகியோரின் ரிமோட் கன்ட்ரோல் பொம்மை போல செயல்படுவார். அவர் சுதந்திரமாக முடிவுகளை எடுக்க மாட்டார் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்த நிலையில் சசி தரூரை வீழ்த்தி காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுனா கார்கே வெற்றிபெற்றார்.

இந்த நிலையில்தான் காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து திமுக செய்திதொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. கட்சி தலைவர் தேர்தல் முறையை அவர் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. தலைவராக தேர்வு செய்யப்பட்ட மல்லிகார்ஜுனா கார்கே குறித்தும் அவர் விமர்சனம் செய்துள்ளார் என்கிறார்கள். காங்கிரஸ் கட்சியினர் இடையே அவரின் கருத்து விமர்சனங்களை சந்தித்தது. திமுக – காங்கிரஸ் கூட்டணியாக உள்ள நிலையில், திமுக செய்திதொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் இப்படி பேசியது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் திமுக செய்திதொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், கட்சி கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டு வருகிறார் கே. எஸ் ராதாகிருஷ்ணன். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அவரின் செயல்பாடுகள் உள்ளன என்பதால் அவர் நீக்கப்படுகிறார் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.