108 ஆம்புலன்ஸ்சில் சென்ற இளம் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவரது வயிற்றில் இருந்த சிசுவும், கர்ப்பிணி பெண்ணின் தாயாரும் இந்த விபத்தில் பலியானது சிவகங்கை மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மஞ்சத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது மகள் நிவேதா நிறைமாத கர்ப்பிணி. பிரசவ காலம் நெருங்கவே எப்போது குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார். பிரசவ வலி எடுத்தது. இதனையடுத்து சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து 108 வாகனம் நெஞ்சத்தூர் சென்று அங்கிருந்து நிவேதாவையும்,அவரது தாயாரையும் பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது இளையான்குடி -சிவகங்கை சாலையில் செங்குளம் என்ற இடத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழுந்து சாலையோர மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கர்ப்பிணிப் பெண் நிவேதா, அவருடன் துணைக்கு வந்த தாயார் விஜயலட்சுமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வயிற்றில் இருந்த சிசுவும் இந்த உலகத்தை பார்க்காமலேயே மரணித்தது.
விபத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மலையரசன்,செவிலியர் செல்வி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த சிவகங்கை நகர் போலீசார் சம்பவம் இடம் வந்த உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணியும், அவரது தாயாரும் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் மஞ்சத்தூர் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.