தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA)-ன் காவல்நிலையம் திறக்க தமிழக அரசு அனுமதி!

தெலுங்கானாவின் ஹைதராபாத், கேரளாவின் கொச்சியை தொடர்ந்து தமிழ்நாட்டின் சென்னையிலும் தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA)-ன் காவல்நிலையம் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய விசாரணை அமைப்புகளில் பயங்கரவாத செயல்களுக்கு எதிரான வழக்குகளை கையாளக் கூடியது தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி பல நூறு உயிர்களை காவு வாங்கியதைத் தொடர்ந்து என்.ஐ.ஏ. உருவாக்கப்பட்டது. பின்னர் 2019-ம் ஆண்டு என்.ஐ.ஏ.வுக்கு அதிக அதிகாரங்களைக் கூடிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

என்.ஐ.ஏ.வுக்கு கூடுதல் அதிகாரம் மசோதாவை நாடாளுமன்றத்தில் திமுக ஆதரித்தது. அப்போது இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தேசிய புலனாய்வு ஏஜென்சியானது மாநிலங்களின் போலீசாருடன் இணைந்து பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதேநேரத்தில் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் செயல்பாடுகள் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் என்கிறது என்கிற விமர்சனங்களும் உண்டு.

இருந்த போதும் என்.ஐ.ஏ.வால் மாநில உரிமைகள் பறிக்கப்பட்டாது என்பது திமுகவின் நிலைப்பாடு. என்.ஐ.ஏ. மசோதாவை திமுக ஆதரித்தது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த அக்கட்சியின் மூத்த தலைவர் ஆ.ராசா எம்.பி, என்.ஐ.ஏ. மசோதாவின் நான்கு திருத்தங்கள் அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதத்தில் எந்த புது அதிகாரத்தையும் காவல்துறைக்கு வழங்கிடவில்லை; இந்த சட்டம் புதிதாக இப்போதுதான் கொண்டு வரப்படுவது போலவும், மாநில உரிமைகள் பறிக்கப்படுவது போலவும் திரித்து செய்திகளை பரப்புகின்றனர் எனவும் கூறியிருந்தார். ஆனாலும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் என்.ஐ.ஏ. குறித்து விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.

அண்மையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிப்பதற்கு முன்பாக தமிழகத்தில் குக்கிராமங்களி கூட தமிழக போலீசாரின் உதவியுடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி பலரையும் கைது செய்தனர். அப்போது சிறுபான்மையினரால் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டது என்.ஐ.ஏ.

இந்நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் என்.ஐ.ஏ. போலீஸ் ஸ்டேஷன் திறப்பதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. என்.ஐ.ஏ. காவல்நிலையங்கள் ஏற்கனவே டெல்லி, குவஹாத்தி (அஸ்ஸாம்), ஹைதராபாத்(தெலுங்கானா), கொச்சி (கேரளா), மும்பை (மகாராஷ்டிரா), கொல்கத்தா (மேற்கு வங்கம்), லக்னோ (உ.பி), ஜம்மு (ஜம்மு காஷ்மீர்), ராய்ப்பூர் (சத்தீஸ்கர்), ராஞ்சி (ஜார்க்கண்ட்), இம்பால் (மணிப்பூர்) ஆகிய இடங்களில் உள்ளன. இதுவரை தமிழகம் சார்ந்த பயங்கரவாதம் தொடர்பான வழக்குகள் டெல்லி அல்லது ஹைதராபாத் என்.ஐ.ஏ. காவல்நிலையங்களில்தான் பதிவு செய்யபப்ட்டு வந்தன. இனி சென்னை என்.ஐ.ஏ. காவல்நிலையமே இந்த வழக்குகளை கையாளும். தற்போதைய நிலையில் என்.ஐ.ஏ.-வின் சென்னை அதிகாரிகள் மொத்தம் 14 வழக்குகளை கையாண்டு வருகின்றனர். சென்னையில் என்.ஐ.ஏ. அலுவலகம் திறக்க அனுமதி கோரி கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசுக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடிதம் அனுப்பி இருந்தனர். தற்போது மத்திய அரசின் பிஎஸ்என்எல் அலுவலக்கத்தில் இருந்து என்.ஐ.ஏ. கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இனி இந்த கிளை அலுவலகமே என்.ஐ.ஏ. காவல்நிலையமாக தரம் உயர்த்தப்படுகிறது. சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் என்.ஐ.ஏ.வுக்கு தனி அலுவல கட்டிடம் கட்டப்பட்டும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.