தூத்துக்குடி துப்பாக்கி சூடு: 3 வட்டாட்சியர்கள், 4 போலீசார் சஸ்பெண்ட்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்த போது, அந்த ஆலையால் மிகக் கடுமையான மாசு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டினர். ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட என்பதை வலியுறுத்தியும் அவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். கடந்த 2018 மே 22இல் அவர் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் திடீரென குழப்பம் ஏற்பட்டது. போராட்டத்தைக் கலைப்பதாகக் கூறி போலீசார் தடியடி நடத்தினர். அத்துடன் நில்லாமல் துப்பாக்கிச்சூட்டையும் நடத்தினர். அந்த மோசமான சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்தனர். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்குவதாக இந்தச் சம்பவம் அமைந்து இருந்தது.

இதையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன், விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்தார். கடந்த மே 18ஆம் தேதி இந்த அறிக்கை முதல்வரிடம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அது சட்டசபையிலும் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 3000 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், துப்பாக்கிச் சூடு தொடர்பாகப் பல விஷயங்கள் விளக்கப்பட்டு உள்ளது. எந்தவொரு எச்சரிக்கையும் இல்லாமல் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து உள்ளதாகவும் ஒரே போலீஸ்காரர் மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார் என்றும் கூறப்பட்டு உள்ளது. காட்டில் வேட்டையாடுவது போலச் சுடலை கண்ணு செயல்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. ஒரே போலீசாரை 4 இடங்களில் வைத்துச் சுட வைத்து உள்ளதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது. இந்தச் சம்பவத்தில் போலீசாரின் செயல்பாடுகளை அறிக்கையில் கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும், அப்போதைய தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷன், தென்மண்டல ஐ.ஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், தூத்துக்குடி எஸ்பி மகேந்திரன் உள்பட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இது பெரும் விவாதத்தைக் கிளப்பி இருந்தது. மேலும், இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளவர்கள் மீது தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளது. ஆணையத்தின் பரிந்துரையை தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து முதற்கட்டமாக துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த போது புதுக்கோட்டை இன்ஸ்பெக்டராக பணியாற்றிய திருமலை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவில் உதவி கமிஷனராக பணியாற்றி வரும் நிலையில், அவர் தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதே போல துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பணியில் இருந்த முதல்நிலை காவலர் சுடலைக்கண்ணு, கலெக்டர் அலுவலகம் உள்ளே பணியில் இருந்த சங்கர், சதீஸ் ஆகிய 3 காவலர்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரும் நெல்லை மாநகர காவல்துறையில் பணியாற்றி வந்த நிலையில் அவர்கள் மீது முதற்கட்டமாக சஸ்பெண்டு நடவடிக்கை பாய்ந்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வட்டாட்சியர்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்து அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.