தீபாவளி பண்டிகை விடுமுறையில் மதுக் கடைகளை இழுத்து மூடுங்கள்: அன்புமணி!

தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி மதுபான கடைகளை மூட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்று வரும் கட்சி நிகழ்ச்சிகளில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் செய்தியாளர்களை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார்.
அப்போது அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்திய காரணத்தால், பல்லடம் பகுதிகளில் செயல்பட்டு வரும் விசைத்தறிகளை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. ஒரு பக்கம் மது, இன்னொரு பக்கம் சூது, மறுபக்கம் போதைப் பொருட்கள். தற்போது ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் தான் போதைப்பொருட்கள் அதிகமாக இருக்கும். ஆனால் இப்போது தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக சிறப்பு காவலர்களை நியமிக்க வேண்டும்.

அதேபோல், கடந்த ஆண்டு வேலைவாய்ப்புக்காக 64 லட்சம் இளைஞர்கள் பதிவு செய்திருந்த நிலையில், தற்போது 74 லட்சமாக உயர்ந்துள்ளது. எங்கும் வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

இதனிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் நிர்வாகம் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. கல்வி, சுகாதாரம், விவசாயம், சுகாதாரத்திற்கு இலக்கு நிர்ணயிக்கலாம். ஆனால் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது வெட்கக்கேடாது. தீபாவளிக்கு முதல் நாள் மற்றும் மறுநாள் மதுபான கடைகளை மூட வேண்டும்.

இந்தி பேசும் மாநிலங்களில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், இணைப்பு மொழியாக இந்தியை கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்கள். இதனால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு வராது என்று தமிழக பாஜக தரப்பில் கூறி வருகிறார்கள். ஆனால் பாதிப்பு வராமல் இருக்காது. இந்தியாவில் உள்ள 22 அலுவல் மொழிகளில் இந்தியும் ஒன்று. இது தவறான கொள்கை முடிவு. தேவை என்றால் மக்களே இந்தியை கற்றுக் கொள்வார்கள். இந்தியை திணித்தால் அதற்கான எதிர்வினை கொடுக்கப்படும். எங்கள் அடையாளம் தமிழ் தான். அதனை அழித்துவிட்டு, வேறு அடையாளத்தை திணிக்க முயற்சிக்கிறார்கள். மறைமுகமாக இந்தியை திணிக்க பல்வேறு முயற்சிகள் நடக்கிறது. இதனை மத்திய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.