துப்பாக்கிச்சூட்டில் எய்தவர்களை விட்டுவிட்டு அம்பு மீது நடவடிக்கையா?: கேஎஸ் அழகிரி!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்த காரணம் அரசிடம் இருந்து சுட சொல்லி வந்த உத்தரவு தான், இதில் தண்டனைக்குரியவர்கள் உத்தரவு போட்டவர்களா அல்லது அந்த உத்தரவை நிறைவேற்றியவர்களா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணைக்காக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் பரிந்துரைப்படி, துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள், வட்டாட்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி கலவரம் வருத்தத்துக்குரியது. போராட்டக்காரர்களுடன் வன்முறை கும்பலும் நுழைந்துவிட்டது. வன்முறையாளர்களை கையாளுவது மிகவும் சிரமமான விசயம். அரசு அதிகாரிகள் சிரமப்பட்டு கையாளுகின்றனர். துப்பாக்கிச்சூடு வரை சென்று இருக்க வேண்டுமா என்பது பலருடைய கருத்து. எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் தான் நடக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்த காரணம் அரசிடம் இருந்து சுடச் சொல்லி உத்தரவு வந்து உள்ளது. இதில் தண்டனைக்குரியவர்கள் அரசாங்கத்திலிருந்து உத்தரவு தந்தவர்களா அல்லது அந்த உத்தரவை நிறைவேற்றியவர்களா என்பதை பற்றி பொதுவாக சிந்தித்து பார்க்க வேண்டும்.

துப்பாக்கிச்சூடு தவறு என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனால் சுட்டவர்கள் அவர்களாகச் சுடவில்லை. அரசாங்கம் சொல்லி சுட்டுள்ளார்கள். இன்றைக்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்றால் நாளைக்கு அரசாங்கம் சொன்னால் செவிகொடுக்க வேண்டாம் என்று கூறுவதாக அர்த்தமாகும். விசாரணை செய்த நீதிபதி அதையும் யோசித்து இருக்க வேண்டும். குற்றம் அரசாங்கத்துடையது. அப்போது அதிகாரத்தில் இருந்தவர்களின் குற்றமே ஒழிய அவர்களின் உத்தரவை நிறைவேற்ற தான் அதிகாரிகள் இருக்கிறார்கள். இதுபோன்ற சிக்கலான விஷயத்தை தமிழக முதலமைச்சர் மீண்டும் நல்ல முறையில் பரிசீலிக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கும் தேவை, மனிதாபிமானமும் தேவை.

ஒரு நிகழ்வுக்கு யார் காரணமோ அவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எய்தவர்களை விட்டு அம்பின் மீது நடவடிக்கை எடுப்பது சரியானதல்ல. அம்பு, எய்தவர்கள் எந்த இலக்கை நோக்கி எய்கிறார்களோ அதை நோக்கியே செல்லும். அதற்கு வழங்கப்பட்ட உத்தரவும் கடமையும் அது தான். எங்கோ நெருடல் இருக்கிறது. அரசாங்கம் நன்றாக யோசிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.