நளினிக்கு பத்தாவது முறையாக பரோல் நீட்டிப்பு!

நளினிக்கு பத்தாவது முறையாக பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நளினி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். வேலூர் பெண்கள் தனி சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் அவரது தாயார் பத்மாவதி உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கண்காணித்துக் கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். இதனை ஏற்று நளினிக்கு கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் ஒரு மாத காலம் பரோல் வாங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. பரோலில் வெளியே வந்த நளினி காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்திலுள்ள உள்ள வீட்டில் தங்கி தனது தாயாரை கவனித்து வருகிறார். தொடர்ந்து ஒன்பது முறை நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்டிருந்தது. அக்டோபர் 25ஆம் தேதி நளினி சிறைக்கு திரும்ப வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இரு தினங்களில் பரோல் முடிந்து சிறைக்கு திரும்ப வேண்டியிருந்த நிலையில் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தாயின் உடல் நிலையை காரணம் காட்டி நளினிக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அளித்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று நளினிக்கு 10ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.