கோவை கார் வெடி விபத்தால் மக்களிடம் நிலவும் அச்சத்தை போக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போது தனது மவுனத்தை கலைப்பார் என, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
நாடு முழுவதும் தீபாவளி திருநாள் உறவுகள், நட்போடும் பிறருக்கு உதவும் மனப்பான்மையுடன் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. ஜனாதிபதியைத் தொடர்ந்து பிரதமர் கார்கிலில் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து சொன்னார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார், ஆளுநர் ஆகியோர் வாழ்த்து சொன்னார்கள். மொழி, மாநிலம், நாடு கடந்த பண்பாட்டுடன் பாரம்பரியமாக கொண்டாடப்படும் தீபாவளியில் தீமைகள் அகன்று நன்மைகள் பரவ வேண்டும் என்பது தான் அனைவரின் எண்ணம். ஆனால், முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து சொல்வதில்லை. தி.மு.க தலைவராக மட்டும் இருந்திருந்தால் மக்கள் எதிர்பார்க்க மாட்டார்கள். மாநில முதலமைச்சராக இருந்துகொண்டு தீபாவளி வாழ்த்து சொல்ல மறுப்பது ஏன்?
சென்னையில் மழை நீர் வடிகாலுக்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து தொலைக்காட்சி உதவி ஆசிரியர் பலியாகி உள்ளார். இது மாநகராட்சி சாலை அல்ல, நெடுஞ்சாலைத்துறை சாலை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். எதுவாக இருந்தாலும் மரணக் குழியாக சாலைகள் இருக்கக் கூடாது.
கோவையில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து எடப்பாடியார் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். குண்டுவெடிப்பு சம்பவத்தை நேரில் ஆய்வு செய்த காவல்துறை இயக்குநர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். தீபாவளியை முன்னிட்டு இரண்டு நாள்களில் மது 464.21 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வருகிறது. தமிழகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது. இன்றைய இளைஞர்கள் இதன் மூலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் 73 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர், அந்த இளைஞர்களுக்கு போதை வஸ்துகளை பரிசாக கொடுக்கிறதா அரசு?
தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத முதலமைச்சர், கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உறைந்து போய் இருக்கும் மக்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்? இப்போதாவது மௌனம் கலைக்க முன்வருவாரா? எதிர்க்கட்சியாக இருந்தபோது மதுவுக்கு எதிராக போராடிய முதலமைச்சர் இப்போது என்ன சொல்லப் போகிறார்? இரண்டாம் முறையாக தி.மு.க.வின் தலைவர் பதவியை பெற்ற ஸ்டாலினுக்கு புரட்சித்தலைவர் என்று நிதி அமைச்சர் பட்டம் சூட்டியுள்ளார். ஆனால், புரட்சித்தலைவர் இருந்தபோது தி.மு.க.வை கோட்டை பக்கம் வரவிடாமல் மரண அடி கொடுத்தார்.
புரட்சித் தலைவர் பட்டத்தை உங்கள் தலைவருக்கு சூட்டுகிறீர்கள், நிதிதான் பற்றாக்குறை என்றால் உங்கள் தலைவருக்கும் பட்டம் சூட்டுவதிலும் பற்றாக்குறையா? புரட்சித்தலைவர் பட்டம் எம்.ஜி.ஆர் ஒருவருக்குத்தான் பொருந்தும். தீபாவளிக்கு முதலமைச்சர் வாழ்த்து சொல்லாதது, பாரபட்சம் இல்லாமல் நடப்பேன் என ரகசிய காப்பு பிரமாணம் எடுத்ததற்கு எதிரானதாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.