சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் சூரிய கிரகண விருந்து!

இந்தியாவில் நேற்று சூரிய கிரகணம் தென்பட்டு இருக்கும் நிலையில், திராவிடர் கழகம் சார்பில் சென்னை பெரியார் திடலில் மூடநம்பிக்கை ஒழிப்பு சிற்றுண்டி உணவு விருந்து நடைபெற்றது.

இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் பகுதி சூரிய கிரகணம் தென்பட்டது. அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் சூரிய கிரகணம் தெரியவில்லை. இந்தியாவில் மாலை 4:29 மணிக்கு தென்படத் தொடங்கிய இந்த சூரிய கிரகணம், சூரிய அஸ்தமன நேரமான 5:42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்தது. மாலை 5:30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தையும் மக்கள் பார்த்தனர். மொத்தமாக இந்தியாவில் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் இந்த கிரகணம் தென்பட்டது.

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், கோவை, ஊட்டி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் சூரிய கிரகணம் தெளிவாக தென்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் சூரிய கிரகணம் தென்பட்டதற்காக புகைப்படங்களையும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். தொலைநோக்கிகள் உதவியுடன் இதனை பொதுமக்கள் கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சாதாரண கண்களில் சூரிய கிரகணத்தை பார்க்கக்கூடாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து இருந்தனர். சூரிய கிரகணத்தை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடைபெற்றன.

சூரிய கிரகணத்தின்போது கர்ப்பிணி பெண்கள் வெளியில் வரக்கூடாது என்றும், இந்த நேரத்தில் சாப்பிடுவது கூடாது என்றும் பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால், இதனால் உடலுக்கு தீங்கு என்று அறிவியல்பூர்வ சான்றுகள் இல்லை எனவும், இது மூடநம்பிக்கை என்று திராவிட இயக்கங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை கிரகண மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்வை திராவிடர் கழகம் சென்னையில் உள்ள பெரியார் திடலில் நடத்தி இருக்கிறது. கிரகணம் உச்சத்தில் தெரியும் நேரமான மாலை 5:30 மணிக்கு சிற்றுண்டி விருந்து நடத்தப்பட்டது. இதில் கர்ப்பிணி பெண்களும் கலந்துகொண்டார்கள். இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.