டெல்லியில் மகாத்மா காந்தி சமாதியில் மல்லிகார்ஜுன கார்கே அஞ்சலி!

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக இன்று பதவி ஏற்க உள்ள மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் மகாத்மா காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இதனையடுத்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர். 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வாக்களித்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 19-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தினர் அல்லாத ஒருவர் தலைவராக தேர்வு பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, மல்லிகார்ஜுன கார்கே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இன்று தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இதற்காக காங்கிரஸ் தலைமையகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி, தேர்தல் சான்றிதழை கார்கேவிடம் முறைப்படி ஒப்படைக்கிறார். பின்னர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பொறுப்புகளை கார்கேவிடம் ஒப்படைப்பார்கள். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக இன்று பதவி ஏற்க உள்ள மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் ராஜ்காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.