கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கும் அம்மாநில அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு சமீப நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், அம்மாநில அரசை கலைக்க பிரதமர் தயாராக இருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பாக பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநருக்கும் இடையே மாற்றுக் கருத்து நிலவி வருகிறது. குஜராத் மாநிலத்தை போலவே துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் உரிமையை கேரள அரசு நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘பல்கலைக்கழக மானியக் குழு (UGC)’ நிபந்தனைகளின்படி ஆளுநர்தான் இந்த நியமனத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் கூறி வருகிறார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ‘ஏபிஜே அப்துல் கலாம்’ தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆளுநர் நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் இந்த நியமனம் விதிகளை மீறி இருப்பதாக கூறி அம்மாநில உயர்நீதிமன்றம் நியமனத்தை ரத்து செய்தது. இந்த பாயின்டை பிடித்த ஆளுநர், இதே போல மாநிலம் முழுவதும் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இது அம்மாநில அரசை சீண்டும் விதமாக அமைந்தது. ஏற்கெனவே புகைச்சலில் இருந்த மாநில அரசு-ஆளுநர் உறவு இந்த விவகாரத்தில் வெடித்து கிளம்பியது. “தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் பல்கலைக்கழகங்களில் ஆளுநர் மூக்கை நுழைக்கிறார். மட்டுமல்லாது ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை ஆளுநர் அபகரிக்க முயற்சிக்கிறார். சங்பரிவாரங்களின் தூண்டுதலின் பேரில் செயல்படும் ஆளுநரின் போக்கு சட்டம் மற்றும் ஜனநாயக விரோதமானது. துணை வேந்தர்களை ராஜினாமா செய்ய சொல்லும் அதிகாரம் அவருக்கு கிடையாது. மாநிலத்தின் உயர் கல்வி நிலையங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆளுநர் முயல்கிறார்” என்று முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் துணை வேந்தர்கள் ஆளுநரின் உத்தரவை ஏற்க மறுப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து தனது உத்தரவு குறித்து விளக்கம் கேட்டு வரும் 3ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று 9 பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் ஆளுநர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தன. இதனையடுத்து தற்போதும் மேலும் 2 பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆக இப்படியாக மாநிலத்தில் மோதல் போக்கு உக்கிரமடைந்துள்ளதையடுத்து, பாஜகவினர் ஆளுநருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில், “கேரள ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரையும் அரசியலமைப்பையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதை கேரளாவின் பைத்தியக்கார கம்யூனிஸ்ட்டுகள் உணர வேண்டும். ஆளுநரின் முடியை தொட்டால் கூட மாநில அரசை ‘டிஸ்மிஸ்’ செய்ய பிரதமர் மோடி தயாராக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.