உ.பி.யில் குப்பைக்கிடங்கில் கொரோனா தடுப்பூசி குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், கன்னோஜில் உள்ள சமூக சுகாதார மையத்தில் உள்ள குப்பைக்கிடங்கில் கொரோனா தடுப்பூசி (கோவிஷீல்டு) குப்பிகள் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் வினோத் குமார் கருத்து தெரிவிக்கையில், “தடுப்பூசிகளை வீணாக்குவது மிக தீவிரமான விஷயம். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிட்டார்.
ஒரு குப்பியில் 10 தடுப்பூசி மருந்துகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 10 பேர் தடுப்பூசி போட தயாராக இருக்கிறபோது தான் ஒரு குப்பி கோவிஷீல்டு தடுப்பூசியை திறந்து பயன்படுத்த வேண்டும் என்பது விதி ஆகும். சிலநேரங்களில் போதுமான எண்ணிக்கையில் பயனாளிகள் இல்லாமல் ஒரு சிலருக்கு தடுப்பூசி செலுத்தி மீதி மருந்துக்கு குறிப்பிட்ட சில மணி நேரம் வரையில் ஆட்கள் இல்லை என்கிறபோது அந்த குப்பியை விட்டெறிந்து விடுவதாக சொல்லப்படுகிறது.