பிரதமர் குறித்து அவதூறு: ஆசம் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை!

பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், சமாஜ்வாடி கட்சி மூத்தத் தலைவர் ஆசம் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது. இந்தக் கட்சியில், அகிலேஷ் யாதவுக்கு அடுத்த நம்பர் 2 இடத்தில் இருப்பவர், மூத்தத் தலைவர் ஆசம் கான். கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, உத்தர பிரதேச மாநிலத்தில் பேசிய ஆசம் கான், “நாட்டில் முஸ்லீம்கள் இருப்பதற்கு கடினமான சூழலை பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கி வருகிறார்” என பேசி இருந்தார். மேலும், உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாவட்ட ஆட்சியராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி அவுஞ்சநேய குமார் சிங் ஆகியோர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து பாஜக நிர்வாகிகள் ராம்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், தலைவர் ஆசம் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே இந்த வழக்கில் அவருக்கு ஜாமினும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து முறையிட ஆசம் கானுக்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. ராம்பூர் நீதிமன்றத்தின் தண்டனையை எதிர்த்து உடனடியாக உயர் நீதிமன்றத்தில் ஆசம் கான் மேல் முறையீடு செய்யவில்லை எனில், எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்.

இந்தத் தீர்ப்பு குறித்து பேசிய ஆசம் கான், “நான் நம்பிக்கையை இழக்கவில்லை. உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்” கூறினார்.