சட்டம், ஒழுங்கு மாநில அரசுகளின் பொறுப்பு. இது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஹரியாணாவின் சூரஜ்குண்ட் நகரில் மாநில உள்துறை அமைச்சா்கள், செயலாளா்கள், காவல்துறை டிஜிபிக்கள் பங்கேற்கும் இரண்டு நாள் சிந்தனை அமா்வு மாநாடு நேற்று தொடங்கியது. இந்த சிந்தனை அமா்வு கூட்டத்துக்கு அமித் ஷா தலைமை வகித்தாா். சிந்தனை அமா்வு கூட்டத்தில் இன்று (அக்டோபர் 28) இரண்டாம் நாள் அமா்வில் பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
சட்டம், ஒழுங்கு மாநில அரசுகளின் பொறுப்பு. இது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. நாடு முன்னேறும்போது வளர்ச்சிப் பலன்கள் கடைசி நபருக்கும் சென்றடைவதை நாம் உறுதி செய்ய வேண்டும். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பண்டிகைகளின்போது நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவது மாநிலங்களின் கடமை. உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்களில் புதிய கொள்கைகளை உருவாக்குவதன் முயற்சியே சிந்தனை முகாம். சட்டம், ஒழுங்கு என்பது ஒரு மாநிலத்துடன் நின்றுவிடக் கூடியது அல்ல. குற்றங்கள் மாநிலங்களுக்கு இடையே மாறி வருகிறது. தொழில்நுட்பத்தால், குற்றவாளிகள் இப்போது மாநிலங்களில் குற்றங்களைச் செய்ய அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர். எல்லை தாண்டிய குற்றவாளிகள் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில், அனைத்து மாநில அரசுகளும் பயங்கரவாதத்தை தகர்ப்பதற்கான நடவடிக்கைகளில் பொறுப்புடன் செயல்பட்டன. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ளும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டியது அவசியம்.
மக்களுக்கு செய்திகள் தொடர்பாக விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். மக்கள் ஒரு செய்தியை பகிர்வதற்கு முன்பாக அவர்கள் பகிரும் செய்தியின் உண்மைத்தன்மை குறித்து ஆராய வேண்டும். ஒரு செய்தியை பார்த்த உடனே நம்பிவிடாமல் அந்த செய்தி குறித்து ஆராய வேண்டும். பின்னர், ஒரு முறைக்கு பத்து முறை படித்து உண்மை என்று தெரிந்தால் மட்டுமே செய்தியைப் பகிர வேண்டும். ஒரு செய்தி உண்மையா அல்லது பொய்யானதா என அறிவதற்கு ஒவ்வொரு தளத்திலும் கருவிகள் உள்ளன. நீங்கள் ஒரு செய்தியை வெவ்வேறு தளங்களில் படிக்கும்போதும் உங்களுக்கு செய்தியின் தன்மையில் உள்ள மாற்றம் தெரியும். சமூக ஊடகங்களில் வலம் வரும் பொய்யான செய்திகளை பகிர்வதற்கு முன்னதாக ஒருவர் பலமுறை யோசிக்க வேண்டும். இதுபோன்ற பொய்யான செய்திகளின் பரவலைத் தடுக்க நாம் தொழில்நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்த வேண்டும்.
அனைத்து மாநிலங்களும் குற்றங்களைத் தடுப்பதிலும் குற்றவாளிகளைக் கையாள்வதிலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கூட்டாட்சி என்பது அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ளது. அது ஒரு உணர்வு மட்டுமல்ல.. மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்குமான பொறுப்பும் கூட. அனைத்து மாநில போலீசாருக்கும் ஒரே நாடு- ஒரே சீருடை என்பதை அமல்படுத்தலாம். இது ஜஸ்ட் யோசனை மட்டும்தான். இதனை மாநிலங்களில் நான் திணிக்கப் போவது இல்லை. ஒருவேளை அடுத்த 5 ஆண்டுகள் அல்லது 50 அல்லது 100 ஆண்டுகளில் இப்படி ஒன்று நடக்கலாம். அதற்கான சிந்தனையும் யோசனையும்தான் இது. என்னைப் பொறுத்தவரையில் நமது நாட்டின் போலீஸுக்கு ஒரு தனித்த அடையாளம் தேவை.
மாநில அரசுகள் பழைய சட்டங்களை ஆராய்ந்து அவற்றை தற்போதைய நிலைமைக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டியதும் அவசியமானதாகும். பயங்கரவாதத்தின் அடிப்படை கட்டமைப்பை நாம் ஒழிக்க வேண்டும். ஒவ்வொரு மாநில அரசும் அதன் சொந்தத் திறனுடனும், புரிதலுடனும் தங்கள் பங்கைச் செய்ய முயற்சிக்கின்றன. அனைத்து மாநிலங்களும் ஒன்று கூடி நிலைமையைக் கையாள்வது காலத்தின் தேவை. துப்பாக்கி அல்லது பேனாவால் தூண்டிவிடப்படும் நக்சல் தீவிரவாதத்தின் ஒவ்வொரு வடிவமும், நாட்டின் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதைத் தடுக்க, அவை வேரோடு அழிக்கப்பட வேண்டும். வரும் தலைமுறையினரின் மனதை சிதைக்கும் வகையில் இதுபோன்ற சக்திகள் தங்களது அறிவுத் துறையை அதிகரித்து வருகின்றன. தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காகவும், நம் நாட்டில் இதுபோன்ற சக்திகள் வளர அனுமதிக்க முடியாது. இத்தகைய சக்திகளுக்கு சர்வதேச அளவில் கணிசமான உதவி கிடைக்கின்றன. கடந்த எட்டு ஆண்டுகளில், நாட்டில் நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் அல்லது வடகிழக்கு மாநிலங்கள் என எதுவாக இருந்தாலும், இன்று நாம் நிரந்தர அமைதியை நோக்கி வேகமாக நகர்கிறோம். இப்போது நாம் உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் விரைவான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். இன்று, எல்லை மற்றும் கடலோரப் பகுதிகளில் மாற்றுக் குடியேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த பிராந்தியங்களில் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை நிறுத்துவதில் இது நீண்ட தூரம் செல்ல முடியும். இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு எல்லை மற்றும் கடலோர மாநிலங்களின் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். பல ஆண்டுகளாக டிஜிபி மாநாடுகளில் இருந்து கிடைத்த ஆலோசனைகளை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். காவல்துறை வாகனங்கள் செயல்திறனுடன் தொடர்புடையது என்பதால் அவை ஒருபோதும் பழையதாக இருக்கக்கூடாது. இந்த சிந்தனை அமர்வில், சிறந்த ஆலோசனைகளுடன் கூடிய வழிமுறை வகுக்கப்படும் என நான் உறுதியாக கருதுகிறேன். உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.