பக்கத்து தெருவுக்கு போனால் கூட அபராதம் வசூலிக்கும் போக்குவரத்து போலீஸாரின் செயல்பாடு நியாயமற்றது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் போக்குவரத்து போலீஸார் காட்டும் கெடுபிடியால் வாகன் ஓட்டிகள் வேதனையும், கலக்கமும் அடைந்துள்ளனர். போக்குவரத்து போலீஸார் ஹெல்மெட் போடாதவர்கள், இன்ஸ்யூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள், சீட் பெல்ட் அணியாதவர்கள் என கடந்த 2 நாட்களாக போக்குவரத்து போலீஸார் விரட்டி விரட்டி சோதனை செய்து அபராதத் தொகை வசூலித்து வருகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், ஹெல்மெட் விலையை காட்டிலும் அபராதத் தொகை அதிகம் இருப்பது தான். இதேபோல் 46 வகையான விதிமீறல்களை உருவாக்கி ஒவ்வொன்றுக்கும் அபராதத் தொகை தனித் தனியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது:-
போக்குவரத்து போலீஸாரின் செயல்பாடு கொஞ்சம் கூட நியாயமற்றது. வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் அதற்காக பக்கத்து தெருவுக்கு கூட மக்களை செல்லவிடாமல் தடுத்து நிறுத்துவதை ஏற்க முடியாது. பொதுமக்களில் நிறைய பேருக்கு இந்த அபராதத் தொகை பற்றியே தெரியவில்லை. இது குறித்து முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்தி கால அவகாசம் வழங்க வேண்டும். ஃபைன் என்ற பெயரில் மக்களை சங்கடப்படுத்தும் வேலைகளில் போக்குவரத்து போலீஸ் ஈடுபடக் கூடாது. ஏற்கனவே மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வால் அல்லல்படும் மக்களுக்கு புது புது நடவடிக்கைகள் பெரும் சுமையை தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.