வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் ஜிதேந்திர நரைனிடம் சிறப்பு புலனாய்வுக்குழு 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கியது அந்தமான் நிகோபார். மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபாரில் தலைமைச் செயலாளராக உள்ள ஜிதேந்திர நரைன் மீது இளம் பெண் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். இது தொடர்பாக 21-வயதான அந்த பெண் அந்தமான் நிகோபார் தலைமை செயலாளராக இருந்த ஜிதேந்திர நரைன் மீது காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் இளம்பெண் கூறியிருந்தாவது:-
அந்தமான் நிகோபாரில் அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 7,800 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த பணியிடங்கள் அனைத்தும் விதிகளை பின்பற்றாமல் சிபாரிசு அடிப்படையில் நிரப்பப்படுவதாக சொல்லப்பட்டது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அப்போதைய தலைமை செயலாளரை அவரது இல்லத்தில் சந்தித்தேன். அப்போது வேலை வாங்கி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். தொழிலாளர் நல கமிஷனர் ஆர்.எல்.ரிஷியும் என்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். கடந்த மே 1 ஆம் தேதியும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். இவ்வாறு அவர் கூறியிருந்தர்.
தலைமைச் செயலாளர் மீதான இந்த குற்றச்சாட்டு அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயர் அதிகாரி மீதான பாலியல் குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இளம் பெண் அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த 1 ஆம் தேதி நரைன் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டது. அப்போது, டெல்லி நிதிக் கழகத்தில் மேலாண்மை இயக்குனராக நரைன் பணியாற்றி வந்தார். பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததும் கடந்த 17 ஆம் தேதி உடனடியாக அவரை மத்திய அரசு இடைநீக்கம் செய்தது.
இதனிடையே முன் ஜாமின் கேட்டு நரைன் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நவம்பர் 14 ஆம் தேதி வரை அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்ததுடன் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்யவும் உத்தரவிட்டது. அதன்படி சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு புலனாய்வுக்குழு நேற்று அந்தமானில் வைத்து ஜிதேந்திர நரைனிடம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணை சுமார் 8 மணி நேரம் நடைபெற்றது. இதற்கு மத்தியில் ஜிதேந்திர நரைனுக்கு எதிராக போராட்டமும் நடைபெற்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குற்றத்திற்கு உடந்தையாக இருந்தாக ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதும் எப்.ஐ.ஆர் போடப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டரிடமும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது.