டெல்லி விமான நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு 184 பேருடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் டேக் ஆப் செய்யும் போது தீப்பிடித்ததால் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதில் இருந்த விமானப் பணியாளா்கள் உள்பட 184 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். உள்நாட்டு, சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் இந்த விமான நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு 184 பயணிகளுடன் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான 6E-2131- புறப்பட தயாராக இருந்தது. இரவு 9.45 மணியளவில் விமானம் கிளம்புவதற்காக தயராக நின்றது. விமானம் டேக் ஆப் செய்யும்போது திடீரென விமானத்தின் என்ஜினில் தீ பிடித்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமான பயணிகள் மத்தியிலும் அச்சம் ஏற்பட்டது. எனினும் சில வினாடிகளில் இந்த தீ அணைந்துவிட்டது. விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் சுமார் 11 மணியளவில் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
விமனத்தின் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீயால் பயணிகள் மத்தியில் பெரும் குழப்பமும் பீதியும் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தால் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
டெல்லியில் இருந்து பெங்களூருவிற்கு இயக்கப்படும் விமானம் (6E2131) டேக் ஆப் செய்யும் நேரத்தில் என்ஜின் பழுதடைந்தது இதனால் டேக் ஆப் செய்வது நிறுத்தப்பட்டது. விமானம் பத்திரமாக பார்க்கிங் பே பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அனைத்து பயணிகளும் பத்திரமாக மாற்று விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக நாங்கள் வருந்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.