உத்தரப் பிரதேச மாநிலத்தில் அக்னிபாத் திட்டத்தின் மூலம் பாதுகாப்புப் படையில் சேர்ந்து ‘அக்னி வீரர்’ ஆவதற்கு சுமார் 35 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதனை டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், “கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் மோடி மக்களுக்கு செய்தது இதுதான்” என்று விமர்சித்துள்ளார்.
நாட்டில் வேலையின்மை பிரச்னை ஆளும் பாஜக அரசுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும் சீனாவும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் விடுதலையடைந்தாலும், தற்போது சீனாவில் வேலையின்மை விகிதம் 4 சதவிகிதம்தான். ஆனால் இந்தியாவில் 8 சதவிகிதமாக இருக்கிறது. இதனை இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் CMIE எனும் அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதி செய்திருக்கிறது. நகர்ப்புறத்தில் 7.3 சதவிகிதமும், கிராமப்புறத்தில் 8.3 சதவிகிதமும் இந்த வேலையின்மை விகிதம் பதிவாகியுள்ளது.
இன்னும் தெளிவாக சொல்வதெனில், சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் PET தேர்வு நடைபெற்றது. இதில் சில ஆயிரம் காலிப்பணியிடங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இந்த தேர்வுக்கு சுமார் 37 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். அந்த அளவுக்கு இந்தியாவில் வேலையின்மை திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் CMIE அறிக்கையின்படி இம்மாநிலத்தில் வேலையின்மை விகிதம் மிகவும் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக இவ்வளவு குறைந்த விகிதம் உள்ள மாநிலத்திலேயே லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைக்கு திண்டாடப்படக்கூடிய நிலையில் இந்தியா முழுவதும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நிச்சயம் கோடிக்கணக்கில் இருக்கும் என சமூக செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது அக்னிபாத் திட்டத்தின் மூலம் தற்காலிக பாதுகாப்புப் படை வீரராக (‘அக்னிவீர்’) பணியாற்ற இளைஞர்களுக்கு ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு 35 லட்சம் உத்தரப் பிரதேச இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்தியா முழுவதுமே 14 லட்சம் வீரர்கள்தான் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 35 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், “உத்தரப் பிரதேசத்தில் கிரேடு ‘சி’ வேலைகளுக்கு 37 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தற்போது அக்னிவீர் பணிக்கு 35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வேலையில்லாமல் விரக்தியில் இருக்கும் இளைஞர்களின் குரலுக்கு அரசாங்கம் செவி சாய்க்கிறதா? கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் மோடி மக்களுக்கு செய்தது இதுதான். வேலையின்மை விகிதம் 8 சதவீதமாக உள்ளது. இது மிகவும் குறைவான மதிப்பீடுதான். நிதி அமைச்சகத்தின் செப்டம்பர் மாத மதிப்பாய்வில் வேலையில்லா திண்டாட்டம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை!” என்று கூறியுள்ளார்.