என் தாய்க்கு பிறகு நான் வணங்கும் தாய் காவேரி தான்: அன்புமணி ராமதாஸ்

என் தாய்க்கு பிறகு காவேரி தாயை நான் வணங்குகின்றேன். என்னிடம் ஆட்சி இருந்தால் ஒரு லட்சம் கோடியை நீர் மேலாண்மைக்கு ஒதுக்குவேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் சோழர் நீர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரண்டு நாள் நடைபயணம் மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில் இன்று காலை தன்னுடைய நடை பயணத்தை திட்டமிட்டபடி தொடங்கினார். தொடங்குவதற்கு முன்னர் மேடையில் பேசிய அவர் கூறியதாவது:-

அரியலூர் சோழர் பாசன திட்டத்தை உடனடியாக செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். என் தாய்க்கு பிறகு காவேரி தாயை நான் வணங்குகின்றேன் காவிரித்தாய் தமிழ்நாட்டில் உள்ள 5 கோடி மக்களின் தாகத்தை தீர்க்கின்ற தாய். 20 மாவட்டங்களில் உள்ள மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவையை பூர்த்தி செய்கின்றது. அப்படிப்பட்ட தாயை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும். தற்போது காவிரியில் தண்ணீர் அதிக அளவில் வருகிறது அந்த தண்ணீரை எல்லாம் வறண்ட பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் நம்முடைய கோரிக்கை. அரசின் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்று நிறைவேற்ற தான் இது போன்ற விழிப்புணர்வுகளை நடைபயணங்களை நாம் மேற்கொண்டு வருகிறோம்.

பாமகவின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்று கொள்ளிடம் ஆற்றில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை உருவாக்க வேண்டும் அப்படி பார்த்தால் கொள்ளிடம் ஆற்றில் இதுவரை 11 தடுப்பணைகளை கட்டியிருக்க வேண்டும் ஆனால் கட்டவில்லை. தடுப்பணைகளை கட்டுவதற்கு கூட நாம் போராட்டம் செய்ய வேண்டிய சூழ்நிலை தான் உள்ளது. தற்போது நாம் மேற்கொண்டு இருக்கக்கூடிய இந்த நடை பயணத்தின் நோக்கம் அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசன திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும்.

ஒரு காலத்தில் மன்னர் காலத்தில் அரியலூர் மாவட்டம் பொன் விளையும் பூமியாக இருந்தது. ஏன் பிரிட்டிஷ் காலத்தில் கூட அப்படியாக தான் நிலை இருந்தது ஆனால் அதன் பிறகு வானம் பார்த்த பூமியாக மாறிவிட்டது. இங்குள்ள ஆறு ஏரி குளம் வாய்க்கால் போன்றவை எல்லாம் தூர்ந்துள்ளது அவற்றை தூர்வார தமிழக அரசு முன் வர வேண்டும். இங்குள்ள கண்டராதித்தம் ஏரி மிகப்பெரிய ஏரி 1578 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த மிகப்பெரிய ஏரி காணாமல் போய்விட்டது அது எங்கே என தேடும் நிலை தான் உள்ளது. சோழ கங்கம் ஏரி, செம்பியன் மாதேவி ஏரி இவையெல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு அடையாளம் காணாமல் சிதைக்கப்பட்டுள்ளது தூர்ந்து போய் உள்ளது.

மன்னராட்சி காலத்தில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஏராளமான நீர்வள ஆதாரங்களை பெருக்கியுள்ளனர் அவற்றையெல்லாம் நாம் பாதுகாக்க தவறிவிட்டோம். தற்போதாவது விழிப்புணர்வோடு முடித்துக் கொண்டு அவற்றையெல்லாம் மீட்டெடுத்தால் தான் அடுத்த சந்ததியினருக்கு நாம் இவற்றை எடுத்துச் செல்ல முடியும். அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசன திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் இந்த பூமி பொன் விளையும் பூமியாக மாறும். விவசாயம் செழிக்கும். இதனால் இம்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வெளியூரிலே சென்று பணியாற்றி வரக்கூடியவர்கள் இங்கே திரும்பி மகிழ்ச்சியாக சொந்த ஊரில் வாழும் நிலை ஏற்படுத்தலாம். அரியலூர் மாவட்டத்தில் தற்போது 90 ஆயிரம் ஏக்கர் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது ஆனால் சோழர் பாசன திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் இரண்டு லட்சம் ஏக்கர் விவசாயம் செய்யும் பூமியாக மாற்றலாம். அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து தரப்பினரும் இந்த உன்னத திட்டத்தில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.