எதிர்க்கட்சியைச் சேர்ந்த 25 தலைவர்களின் பாதுகாப்பு ரத்து: மராட்டிய அரசு!

மகா விகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கும் 25 தலைவர்களின் பாதுகாப்பை மராட்டிய மாநில அரசு ரத்து செய்துள்ளது.

முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்களுக்கு அரசு போலீஸ் பாதுகாப்பை வழங்கி வருகிறது. தலைவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் அடிப்படையில் ஒய், ஒய் பிளஸ் என பல்வேறு வகைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மராட்டியத்தில் ஆட்சி செய்து வரும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி அரசு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகா விகாஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் மந்திரிகள், தலைவர்கள் 25 பேரின் பாதுகாப்பை அதிரடியாக ரத்து செய்துள்ளது.

இதன்படி முன்னாள் மந்திரிகள் ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பால் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் மந்திரிகள் நவாப் மாலிக், அனில் தேஷ்முக், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் ஆகியோரின் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல விஜய் வடேட்டிவார், பாலாசாகேப் தோரட், மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே, பாஸ்கர் ஜாதவ், சதேஜ் பாட்டீல், தனஞ்செய் முண்டே, சினில் கேதாரே, நர்கரி ஜர்வால் மற்றும் வருண் சர்தேசாய் உள்ளிட்ட தலைவர்களின் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நீக்கப்பட்ட ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பால் மற்றும் அனில் தேஷ்முக் 3 பேரும் முன்னாள் உள்துறை மந்திரிகள் ஆவர். அதேநேரம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் குடும்பத்தினர், தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதேபோல காங்கிரஸ் தலைவர்களும், முன்னாள் முதல்-மந்திரிகளுமான அசோக் சவான், பிரிதிவிராஜ் சவான் ஆகியோருக்கு “ஒய் பிளஸ்” பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆச்சரியமளிக்கும் விதமாக உத்தவ் தாக்கரேவின் தனிப்பட்ட செயலாளரும், நம்பகத்தன்மை வாய்ந்த உதவியாளருமான மிலிந்த் நர்வேகருக்கு ஒய்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இந்த பாதுகாப்பு தொடர்பான முடிவுகள் அனைத்தும் அச்சுறுத்தல் உணர்வை கருத்தில் கொண்டு நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்டவை என்றும், இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. போலீஸ் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டவர்களில் பெரும்பாலனவர்கள் முன்னாள் மந்திரிகள் ஆவர். இனி இவர்களின் வீடுகளுக்கு வெளியேயும், அவர்களுக்கு துணையாகவும் நிரந்தர போலீஸ் பாதுகாப்பு இருக்காது. மராட்டிய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மகா விகாஷ் அகாடி கூட்டணியை சேர்ந்த தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.