குஜராத் தேர்தலில் அதிக வாக்குகளை பெறுவதற்காகவே பொது சிவில் சட்டம்: ஒவைசி

குஜராத் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வர மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இது இந்துத்துவத்தின் திட்டம் என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசதுத்தீன் ஒவைசி தெரிவித்து இருக்கிறார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு அத்வானி தலைமையில் பாஜக லோக்சபா தேர்தலை பாஜக எதிர்கொண்டபோது நாடு முழுவதும் அனைவருக்கும் சமமான பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என தேர்தலில் வாக்குறுதி அளித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி தலைமையில் பாஜக லோக்சபா தேர்தலை சந்தித்தபோது பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து இருந்தது. சட்டம் ஆனால், 2 முறை ஆட்சியை பிடித்த பாஜக பொது சிவில் சட்டம் தொடர்பான விசயத்தை தேசிய அளவில் கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. அதே நேரம் பாஜக ஆளும் மாநிலங்களில் இதை படிப்படியாக அமல்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் நாட்டிலேயே முதல்முறையாக பாஜக ஆளும் உத்தராகண்ட் மாநிலத்தில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக விரைவில் தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் இமாச்சல பிரதேச அரசும் பொதுசிவில் சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்த இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் குஜராத் மாநிலத்திலும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர அம்மாநில பாஜக அரசு முடிவு செய்து இருக்கிறது. நேற்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் ஆகியோர் கலந்துகொண்ட மாநில அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. குழு அமைக்க திட்டம் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது பாஜக அரசின் திட்டமாக இருக்கிறது. பொது சிவில் சட்டத்தை அமைப்பதற்கான குழுவை ஏற்படுத்துவது தொடர்பான அறிவிப்பை அமைச்சரவைக் கூட்டத்தில் அம்மாநில உள்துறை அமைச்சர் ஹரிஷ் சங்கவி வெளியிட்டு இருக்கிறார். குஜராத்தில் அமல்படுத்தப்பட இருக்கும் பொது சிவில் சட்டத்தை மதிப்பீடு செய்வதற்கான குழு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு குரல்களும் வலுத்து வருகின்றன. இதுகுறித்து குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வட்காமில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான அசதுத்தீன் ஒவைசி கூறியதாவது:-

குஜராத் தேர்தலில் அதிக வாக்குகளை பெறுவதற்காகவே பொது சிவில் சட்டத்தை கொண்டு வருகிறார்கள். இதன் மூலம் பாஜக அரசு தங்கள் இந்துத்துவ திட்டத்தை அமல்படுத்த இருக்கிறது. பொது சிவில் சட்டம் என்பது மத்திய அரசின் அதிகார வரம்புக்க்கு உட்பட்டது என்றும் மாநில அரசுக்கு இதில் சம்பந்தம் கிடையாது என்றும் பிரதமர் மோடி உச்ச நீதிமன்றத்தில் கூறியிருந்தார். பிரிக்கப்படாத இந்து கூட்டு குடும்பத்திற்கு வருமான வரிச்சலுகை அளித்துவிட்டு முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு வரிச்சலுகை இன்றி விலக்கு அளிப்பது சமத்துவத்திற்கு எதிரானது இல்லையா? பொதுசிவில் சட்டம் என்பது விருப்பப்பட்டு கோருவதாக இருக்க வேண்டுமே தவிர கட்டாயமாக இருக்கக்கூடாது என்று பாபாசாகேப் அம்பேத்கர் கூறியது உண்மையில்லையா?

பாஜக தனது இந்துத்வா அஜெண்டாவை நோக்கியே செல்ல விரும்புகிறது. குறிப்பாக தேர்தல் சமயத்தில் வாக்குகளை பெறுவதற்காக இத்தகைய விவகாரங்களை எழுப்பும் பழக்கத்தை கொண்டுள்ளது. சட்டத்தை உருவாக்க முடியுமா? பொது சிவில் சட்டத்திற்கு அவசியமோ.. விருப்பமோ.. இல்லை என்று கடந்த 2018- ஆம் ஆண்டு சட்ட ஆணையம் கூறியிருந்தது. முஸ்லிம்களை பொருத்தவரை திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம்தான். இந்துக்களுக்கு அப்படியல்ல. வாழ்க்கை முழுவதுக்குமானது. கிறிஸ்தவர்களை பொறுத்தவரை அவரது விருப்பம் மற்றும் செயல். பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுவதன் மூலம் சிறுபான்மை மக்களின் நலன்களை பாதுகாக்கும் சட்டப்பிரிவு 29-க்கு எதிராக யாரேனும் சட்டத்தை உருவாக்க முடியுமா? இவ்வாறு அவர் பேசினார்.