குஜராத் பால விபத்தால் என் இதயம் வலியில் கனக்கிறது: பிரதமர் மோடி!

குஜராத் பால விபத்து நிகழ்வால் தன் இதயம் வலியில் கனப்பதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்

குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதியின் குறுக்கே 233 மீட்டர் நீளம், 4.6 அடி அகலத்தில் தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் ரூ.2 கோடியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த தீபாவளியன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. சுற்றுலாத் தலமான மோர்பி நகர் தொங்கு பாலத்தில் நேற்று பொதுமக்கள் திரண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பாலம் உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 132 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பலர் குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள். சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், குஜராத் பால விபத்து நிகழ்வால் தன் இதயம் வலியில் கனப்பதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 147ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, குஜராத் மாநிலம் நர்மதை நதியில் சர்தார் சரோவர் அணை அருகே அமைக்கப்பட்டுள்ள வல்லபாய் படேலின் பிரமாண்ட ஒற்றுமை சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:-

என் வாழ்நாளில் இத்தகைய ஒரு துயரத்தை நான் எப்போதும் கடந்ததில்லை. ஒருபுறம் என் இதயம் வலியில் கனக்கிறது. இன்னொரு புறம் கடமையின் பாதை என்னை அழைக்கிறது. மோர்பி தொங்கு பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். குஜராத் அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்து நடந்தது முதல் குஜராத் அரசு மீட்பு, நிவாரணப் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறது. மத்திய அரசும் மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அதிக அக்கறையுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்பு, நிவாரனப் பணிகளில் சிறு தொய்வும் இருக்காது என்று நான் உறுதியளிக்கிறேன்.

பாலம் விபத்து தொடர்பாக மாநில அரசு விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. நான் இங்கு நின்று கொண்டிருந்தாலும் கூட என் மனம் முழுவதும் மோர்பி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில், குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து தொடர்பாக 9 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலத்தை புதுப்பித்த கட்டுமான நிறுவனத்தை சேர்ந்தவர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, அதிக சுமை காரணமாக தொங்கு பாலம் விபத்துக்குள்ளானதாக தடயவியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.