ஹரேன் பாண்டியாவுக்கு நடந்ததைபோல் எனக்கு நடக்காது: சுப்ரமணியன் சாமி!

கடந்த 2003 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட குஜராத் முன்னாள் அமைச்சர் ஹரேன் பாண்டியாவுக்கு நடந்ததைபோல் தனக்கும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் திட்டமிடவில்லை என்று தான் நம்புவதாக பாஜக முன்னாள் எம்பி சுப்ரமணியன் சாமி பரபரப்பு கருத்து டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.

முன்னாள் பாஜக எம்.பியும், பாஜக மூத்த தலைவருமாக இருந்த சுப்பிரமணியன் சாமி கடந்த சில மாதங்களாகவே மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியையும், அரசையும் கடுமையாக டுவிட்டரில் விமர்சித்து வருகிறார். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை விமர்சித்து தொடர்ந்து டுவிட்டரில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இது அரசியல் அரங்கில் பெரும் விவாதப்பொருளாக மாறி வருகிறது.

இந்த நிலையில் இன்று டுவிட்டரில் பதிவிட்டு உள்ள சுப்பிரமணியன் சாமி, “பிரதமர் மோடியும் அமித்ஷாவும் ஹரேன் பாண்டியாபோல் என் மீது திட்டமிடவில்லை என்று நான் நம்புகிறேன். அது உண்மையென்றால் என்னுடைய நண்பர்களுக்கு நான் எச்சரிக்கை விடுக்க வேண்டும். எனக்கு என்ன கிடைக்கிறதோ, அதை திரும்பி தருவேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த இருவர் ஆர்.எஸ்.எஸ். உயர்மட்டத்தில் இருப்பவர்களை கூட அவமானப்படுத்தி உள்ளனர்” என்று பதிவிட்டு உள்ளார்.

இதற்கு சுதிர்தா மிஸ்ரா என்பவர் டுவிட்டரில், “அப்படியென்றால் ஹரேன் பாண்டியா கொலையில் இரட்டையரை குற்றம்சாட்டுகிறீர்களா?” என்று கேட்க, ‘ஹரேன் பாண்டியா பாஜகவில் இருந்து ஒதுக்கப்பட்டார்’ என்று சுப்பிரமணியன் சாமி பதில் கொடுத்துள்ளார். பாலாஜி என்ற நபர், “சார், பாதுகாப்பான இடத்துக்கு சென்றுவிடுங்கள். ஹரேன் பாண்டியவுக்கு என்ன நடந்தது என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். உங்களுக்கு எதிரான மோடி – ஷாவின் திட்டம் இது. நீதிமன்றம் உங்களை பாதுகாக்கும் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டார். இதை சுப்ரமணியன் சாமி ரீட்வீட் செய்துள்ளார்.

சிறுவயதில் இருந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்து பணியாற்றி பின்னர் பாஜகவில் இணைந்த ஹரேன் பாண்டிய அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சராக பணியாற்றினார். குஜராத் முன்னாள் முதலமைச்சரான கேஷுபாய் பட்டேலின் ஆதரவாளரான ஹரேன் பாண்டியா, நரேந்திர மோடி தலைமையில் தேர்தலை சந்திக்க மறுத்தார். 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்துக்கு பிறகு இரு தரப்பையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற ஒரே தலைவர் இவர்தான். மோடி – அமித்ஷா இணைக்கு எதிர்கோஷ்டியாக கருதப்பட்ட ஹரேன் பாண்டியா கடந்த 2003 ஆம் ஆண்டு அஹமதாபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு மோடி – அமித்ஷா காரணம் என்று ஹரேன் பாண்டியாவின் மனைவி மற்றும் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.