பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்க, கேரள அமைச்சரவை மசோதா நிறைவேற்றியுள்ளது.
கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசுக்கும், மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே தொடக்கம் முதலே முட்டல் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே, கேரள மாநிலத்தில் உள்ள ஒன்பது பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பதவியில் இருந்து விலக வேண்டும் என அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். ஆனால், இதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆளுநர் ஆரிப் முகமது கானின் உத்தரவை ரத்து செய்தது. இதன் பிறகும் இரு தரப்புக்கும் இடையே மோதல் நிலவி வந்தது.
இதைத் தொடர்ந்து, கேரள பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான மாநில அமைச்சரவை முடிவு செய்தது. மேலும், அந்த பதவிக்கு நிபுணர் ஒருவரை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் கேரள மாநில தலைநகரம் திருவனந்தபுரத்தில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கம் செய்யும் வரைவு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன்படி கேரளா பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், கொச்சின் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம், கன்னூர் பல்கலைக்கழகம், சஙகரசார்வா பல்கலைக்கழகம், துச்சத்தெழுச்சன் மலையாள பல்கலைக்கழகம், கேரளா டிஜிட்டல் பல்கலைக்கழகம், ஸ்ரீ நாராயணகுரு திறந்தநிலை பல்கலைக்கழகம், கேரளா வேளாண் பல்கலைக்கழகம், கேரளா கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், கேரளா மீன்வளம் மற்றும் கடற்படிப்புகள் பல்கலைக்கழகம், கேரளா சுகாதார பல்கலைக்கழகம் மற்றும் ஏபிஜே அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் நீக்கம் செய்யப்படுவதாக மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த பல்கலைக்கழகங்களில் நியமிக்கப்படும் வேந்தர்கள் குற்றச்சாட்டில் ஈடுபட்டால், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் வேந்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.