ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால் ஆளுநர் செல்லும் இடமெல்லாம் கறுப்புக்கொடி காட்டுவோம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குப் பலரும் அடிமையாகி பணத்தை இழந்ததுடன், தொடர் தற்கொலை நிகழ்வுகள் அரங்கேறி வரும் நிலையில் அதனைத் தடுக்க ‘ஆன்லைன் சூதாட்டங்களைத் தடுக்க அவசரச் சட்டத்தை இயற்றியது தமிழ்நாடு அரசு. கடந்த மாதம் 1ஆம் தேதி ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து, அவரது ஒப்புதல் பெற்று நிறைவேற்றியது. பின்னர் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக நிரந்தர தடைச் சட்டத்தைக் கொண்டுவர தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதியே தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவிற்கு இதுவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தராமல் இருந்து வருகிறார். இதற்கிடையே ஏற்கெனவே அமலில் உள்ள அவசர தடைச் சட்டம், ஒரு மாதத்தில் காலாவதியாகி விட்டது.
இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்ட மசோதாவிற்கு இன்னும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததை கண்டித்து திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் இன்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாவது:-
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை சுமார் 32 நபர்கள் உயிரிழந்துள்ளனர். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் இறப்பவர்களுக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், நேரம் ஒதுக்க தெரிந்த ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை சந்திக்க நேரம் ஒதுக்காதது ஏன்? திராவிடர் கழகம் சார்பில் போராட்டங்களை அறிவித்ததற்கு பிறகு தான் ஆளுநர் மாளிகையின் கதவு கொஞ்சம் திறந்திருக்கிறது. திமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்ற விடக்கூடாது என்பதற்காக ஆளுநர் இப்படி செயல்பட்டு வருகிறார். ஆளுநராக இல்லாமல் அரசியல்வாதி போல சனாதான கொள்கைகளை பற்றி பேசி வருகிறார்.
ஆளுநர் இந்த சட்டத்திற்கு நந்தி போல குறுக்கே படுத்து இருக்கிறார். திமுகவுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்பதற்காக இதுபோன்று செய்து வருகிறார். சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இன்னும் 20 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில், ஆளுநர் ஆர்எஸ்எஸ்காரர் போல பேசிக்கொண்டு, தேவை இல்லாமல் திராவிட சித்தாந்தங்களை ஆராய்ச்சி செய்து கொண்டு தன் கடமைகளில் இருந்து தவறுகிறார்.
ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால் எங்களது போராட்ட வடிவம் மாறும். ஆளுநர் செல்லும் இடமெல்லாம் கறுப்புக்கொடி காட்ட நேரிடும். தமிழகம் அமைதியாக இருக்கும் சூழலில் அமளியை ஏற்படுத்த நினைக்கிறார்கள். நாங்கள் வன்முறையில் ஈடுபட மாட்டோம். எங்களது போராட்டம் அடுத்த கட்டமாகவும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.