பஞ்சாபில் பிரபல பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கனடாவை சேர்ந்த ரவுடி கோல்டி பிரார் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் உறுதி செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டம், மூசா கிராமத்தை சேர்ந்த பாடகரான சித்து மூசே வாலா என்பவர், கடந்த மே மாதம் 29 ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு கனடா நாட்டைச் சேர்ந்த முக்கிய ரவுடி கோல்டி பிரார் பொறுப்பேற்றார். கோல்டி பிராரின் நெருங்கிய நண்பர் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு கொலையில் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு பயங்கரவாத குழுக்களுடன் கோல்டி பிரார் மற்றும் லாரன்சுக்கு தொடர்பு உள்ளதால், இந்த வழக்கை என்ஐஏ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனால், நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து கோல்டி பிரார் அமெரிக்காவிற்கு சென்றார். அங்கு கலிபோர்னியாவின் பிரெஸ்னோ நகரம், பிரஜோ மற்றும் சால்ட் லேக் உள்ளிட்ட பகுதிகளில் மாறி மாறி சென்று தஞ்சம் அடைந்தார்.
இந்நிலையில், பாடகர் சித்து மூசா வாலா கொலை வழக்கில், முக்கிய குற்றவாளி கோல்டி பிரார், கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் தேதி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்கள் இந்திய உளவுத் துறையான ‘ரா’, டெல்லி உளவுப்பிரிவு போலீசார் மற்றும் பஞ்சாப் போலீசாருக்கு கிடைத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. கோல்டி பிரார் கைது செய்யப்பட்டு உள்ளதை பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மானும் உறுதி செய்துள்ளார்.