அதிமுகவை முடக்க ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் முடியாது என்று கோவையில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சொத்து வரி, மின் கட்டண உயர்வு, பால் பால் விலை உயர்வு, பழுதடைந்த சாலைகள் ஆகியவற்றை கண்டித்தும் அதிமுக சார்பில் கோவை சிவானந்தா காலனியில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தை முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான பழனிசாமி துவக்கி வைத்து பேசியதாவது:-
எம்ஜிஆர், ஜெயலலிதாவில் மக்கள் நலனுக்காக உருவாக்கியது தான் அதிமுக. இந்த அதிமுகவை பற்றி பேச யோக்கியதை வேண்டும். அந்த யோக்கியதை தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை. 10 ஆண்டு காலத்தில் கோவைக்கு தேவைப்பட்ட திட்டங்களை செயல்படுத்தினோம், தடுப்பணை, ஏரி மராமத்து செய்தோம். இது எங்கள் சாதனை. 3வது குடிநீர்திட்டம் மூலம் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கினோம். அத்திக்கடவு அவினாசி திட்டம் மூலம் தேவையான நீரை வழங்கியது அதிமுக அரசு. 1800 கோடியில் பாலம் அமைத்தோம். மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வந்தோம். கோவை விமான நிலைய விரிவாக்கப்பணியை துவக்கினோம். நாங்கள் உருவாக்கிய பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நாங்கள் துவக்கிய பணிகளை திமுகவினர் திறந்து வைக்கின்றனர். நாங்கள் பெற்ற பிள்ளைக்கு அவர்கள் பெயர் வைக்கின்றனர். எங்கள் மீது அவதூறு பரப்பி வழக்குகள் போடுவதை திமுக அரசு செய்து வருகிறது.
தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது. கார்ப்பரேட் கம்பெனி தமிழகத்தை ஆண்டு வருகிறது. 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி. ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கோவையில் மேம்பாலங்கள், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் போன்ற பல்வேறு திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சியை கொண்டு திட்டத்தை நிறைவேற்றினால் கோவை மக்கள் கொந்தளித்து விடுவார்கள். அன்னூரில் விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்துவதை கைவிட வேண்டும்.
திட்டமிட்டே அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அதிமுகவை முடக்க ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் முடியாது. பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு தர வேண்டும். செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு வழங்குவதை கைவிட வேண்டும். ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் நாங்கள் செய்ததைத் தான் திமுக அரசும் செய்துள்ளது. 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்தது அதிமுக தான். உள்ளாட்சியிலும், சுகாதாரத்துறை, போக்குவரத்து, கூட்டுறவு ஆகிய பல்வேறு துறைகளில் மத்திய அரசிடம் இருந்து விருதுகளை பெற்றிருக்கிறது. ஸ்டாலின் நடைபயணம் செல்லும் போது அவரது மகன் நடித்த ’கலகத் தலைவன்’ படம் எப்படி உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கேட்பது மிகவும் முக்கியமான ஒன்றா?
பல ஆண்டுகால காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டதும் அதிமுக தான். அதிமுக போராட்டத்திற்கு வந்த வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்திருக்கிறது. காவல்துறை அதிகாரிகள் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும். அதிமுக நிர்வாகிகளுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என நினைத்தால் அதன் விளைவு விபரீதமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.
திமுக கட்சியில் திமுகவிற்காக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. தற்போது அதிமுகவில் இருந்து சென்று திமுகவில் அமைச்சர்களாக, எம்.எல்.ஏக்களாக உள்ளவர்கள் திமுக பேச்சைக் கேட்டு தவறான செயல்களை செய்ய வேண்டாம். வரும் 9ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும், 12ஆம் தேதி ஊராட்சி ஒன்றியங்களிலும், 13ஆம் தேதி நகராட்சி, மாநகராட்சிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
கடந்த ஆட்சியில் ஆளுநரை சந்தித்து அதிமுக மீது திமுக புகார் மனு அளித்தது. இதேபோல் தற்போது திமுக ஆட்சியில் நாங்கள் ஆளுநரை சந்தித்து மனு கொடுப்பதில் என்ன தவறு உள்ளது?. வரும் 2024 மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 50 ஆண்டுகால வளர்ச்சி கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு தேவையானதைப் பார்த்துப் பார்த்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தார். சாலைகள், பாலங்கள் என அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு முடக்கிவிட்டது. கோவையில் போராட்டம் அறிவித்ததும் இந்த பகுதிக்கே வராமல் இருந்த அமைச்சர் எ.வ.வேலு அடிக்கடி கோவை வருகிறார். சாலை பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. கோவையில் அதிமுக கூட்டம் நடத்தினால் திமுக ஆட்சிக்கு முடிவு காலம் என்பதே நிதர்சனமான உண்மை. எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்தால் தான் தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம் கிடைக்கும்.
நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாத முதலமைச்சர் ஸ்டாலின் தான் அதிமுகவை பார்த்து கேள்வி கேட்கிறார். கோவையில் அதிமுக அரசு கொண்டு வந்த அனைத்து வளர்ச்சித் திட்ட பணிகளையும் திமுக அரசு முடக்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமியோடு முதலமைச்சர் ஸ்டாலின் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? அவருக்கு தைரியம் இருக்கிறதா? திமுக அரசை வீழ்த்தி, மீண்டும் அதிமுக அரசு அரியணை ஏற வைப்போம், எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம். திமுக ஆட்சி மக்களை ஏமாற்றி விட்டது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.