நாங்கள் ஆளுநர் ஆர்என் ரவி மீது எந்த பழியும் சுமர்த்தவில்லை என்றும், இணையவழி ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான அவசர சட்டத்துக்கு தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியதற்கும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானவர்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் தான் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி சூதாட்டத்துக்கு எதிராக திமுக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த அவரச சட்டத்துக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்த நிலையில் அரசாணை பிறப்பிக்கப்படவில்லை.
இதற்கிடையே சட்டபை கூட்டம் தொடங்கியதால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட அனைத்து இணையவழி சூதாட்டத்துக்கு தடை செய்வது தொடர்பான நிரந்தர சட்டம் இயற்ற சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநர் ஆர்என் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீண்ட நாட்களாகியும் இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்என் ரவி சந்தேகங்களை கேட்டார். இதற்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும் இன்று வரை ஆளுநர் ஆர்என் ரவி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. முன்னதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து பேசினார். இந்த வேளையில் ஆளுநரின் சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளித்தார். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி விரைவில் ஒப்புதல் அளிப்பார் என கூறப்படுகிறது.
இதற்கிடையே தான் திமுக கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் ஆளுநர் ஆர்என் ரவியை குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு பதிலடியாக பாஜக தலைவர் அண்ணாமலை, அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்தார். ஆனால் தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கவில்லை என குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் தான் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றி புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் தொடர்பாக நாங்கள் எந்த தவறையும் செய்யவில்லை. தவறு செய்தால் தான் பயப்பட வேண்டும். அவசர சட்டத்துக்கு அரசாணை வெளியிடாததால் எந்த தவறும் வந்துவிடவில்லை. அவசர சட்டம் பற்றி அரசிதழில் வெளியிட்டுள்ளோம். ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான அவசர சட்டத்துக்கு அரசாணை வெளியிடப்படவில்லை. அதற்குரிய காரணத்தை கூறியிருந்தேன். அவரச சட்டம் அக்டோபர் 3ம் தேதி ஆளுநர் ஆர்என் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அன்று மாலையில் அவர் ஒப்புதல் அளித்தார்.
இது வித்தியாசமான ஒரு சட்டம். இந்தியாவுக்கே முன்மாதிரியான சட்டம். இணையவழி சூதாட்டங்களை தடை செய்தல் மற்றும் ஒழுங்குப்படுத்துதல் தொடர்பான சட்டம் தான் இது. இதுவரை அனைவரும் இணையவழி சூதாட்டங்களை தடை செய்யும் சட்டம் மட்டுமே கொண்டு வந்தார்கள். இத்தகைய இணையவழி தடை செய்வதற்கான சட்டத்தை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ரத்து செய்தன. இதனால் தான் நன்கு சிந்தித்து ஆலோசித்து மற்றவர்களின் ஆலோசனைகளை பெற்று இணையவழி ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்துவதற்கும், தடை செய்வதற்கும் சேர்த்து சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இணையவழி ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குப்படுத்துவது என்பதற்கு விதிகள் உள்ளன. இதற்காக Registration Authority வைக்க உள்ளோம். இதனை ஐகோர்ட் மட்ட நீதிபதி, மாவட்ட அளவிலான நீதிபதி, ஓய்வு நீதிபதிகள் அளவில் அமைப்பது பற்றி விதிகளும், வழிமுறைகளும் வகுக்கப்பட வேண்டும். அவசர சட்டத்துக்கு ஆளுநர் கையெழுத்திட்ட உடன் அரசிதழில் வெளியிட்டோம். விதிகளும் வழிமுறைகளும் வகுக்க குறைந்தது ஒருநாளாவது நேரம் வேண்டும். ஆனால் அக்டோபர் 5ம் தேதி சட்டசபை கூடும் தேதி அறிவிக்கப்பட்டது.
அக்டோபர் 17 ல் சட்டசபை கூடும் என தேதி அறிவிக்கப்பட்டதால் அவசர சட்டம் இயற்றுவதை விட சட்டசபையில் நிரந்தர சட்டத்துக்கான மசோதா நிறைவேற்றி சட்டம் கொண்டு வருவது தான் பொருத்தமாக இருக்கும் என சட்ட நிபுணர்கள் கூறினார்கள். இதனை தான் சட்ட முன்வடிவாக(மசோதா) சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பினோம். மேலும் அவசர சட்டத்தால் நீதிமன்றத்தில் தடை வாங்க வாய்ப்பு இருந்தது. இதனால் தான் சட்டசபை மூலம் சட்டமசோதா தாக்கல் செய்து நிரந்தர சட்டம் கொண்டு வர முடிவு செய்தோம். இதில் தவறு எந்த தவறும் இல்லை.
ஆளுநர் மீது நாங்கள் எந்த பழியையும் சுமர்த்தவில்லை. கையெழுத்துபோட்டு த ரவில்லை என கூறினோமே தவிர சட்ட முன்வடிவுக்கு கையெழுத்து போட வேண்டும் என கேட்டோம். நான் ஆளுநரை சந்தித்தேன். சில சந்தேகங்களை கேட்டார். நான் விளக்கம் அளித்தேன். அதனை அவர் ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன். சில கேள்வி கேட்டார். பதிலளித்து உள்ளோம். இன்னும் கேள்விகள் கேட்டாலும் பதிலளிக்க தயாராக இருக்கிறோம். சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்துவிட்டு ஒப்புதல் தரும் முடிவில் தான் அவர் உள்ளார். அன்றைய சந்திப்பு அந்த மனநிலையை தான் கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.