மாற்றுத்திறனாளிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு: முக ஸ்டாலின்!

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை சமுதாயத்தில் ஒருங்கிணைத்து, சம உரிமையுடன், வாழ்வதற்கு ஏற்ற சூழலை அமைத்து, அவர்களுக்கு உரிய வாய்ப்பினை வழங்க அனைவரும் உறுதி மேற்கொள்வதுடன், இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக போதுமான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்தும் விதமாக இந்த நாள் அமைந்துள்ளது. இந்நாளில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஏதுவாக விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் விழாக்கள் நடத்தப்பட்டும், மாற்றுத்திறனாளிகள் சேவையினை ஊக்குவிக்கும் வகையில் மாநில விருதுகள் வழங்கப்பட்டும் வருகிறது.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களின் திறனுக்கேற்ற தொழிற்பயிற்சிகள் வழங்கி வேலைவாய்ப்பினை உருவாக்கவும், அவர்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்தியும், அவர்கள் தன்னிச்சையாக பிறரைச் சாராமல் வாழ்வதற்கு பயன்பெறும் நவீன உதவி உபகரணங்கள் பற்றியும் விவரங்களைக் காட்சிப்படுத்தியும், இந்த நாள் மாநிலம் முழுவதும் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்நாளில், நாம் அனைவரும் மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்கியும், அவர்களுக்கு தடையற்ற சூழலை அமைத்தும் அவர்களை நம் வாழ்வில் ஒருங்கிணைப்போம் என உறுதி கொள்வோம் என்று தெரிவித்திருந்தார்.

சென்னையில் இன்று நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

மாற்றுத்திறனாளிகளை அனைவரும் மதிக்க வேண்டும். தனி கவனம் செலுத்த வேண்டும். மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக உருவாக்கிய அந்த பாதை அன்பு பாதை. மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் அடைந்த மகிழ்ச்சியால் நானும் மகிழ்ந்தேன். மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய உதவித்தொகை ரூ.1000ல் இருந்து ரூ.1500ஆக உயர்த்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய உயர்வுத் தொகை ஜனவரி 1ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும். ஓய்வூதியம் உயர்வு மூலம் 4.39 லட்சம் மாற்று திறனாளிகள் பயன்பெறுவர். அரசு மற்றும் தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே பணியாற்ற திட்டங்கள் தொடங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே பணிபுரிய ஏதுவாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகள் அமைத்து தர வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.