வண்டலூர் அருகே கயிறு அறுந்து விழுந்ததில் திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் பலி!

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூரியை முன்னிலைப்படுத்தி விடுதலை என்ற திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படக்காட்சிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் இப்படத்தின் சண்டைக்காட்சிகள் வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரி பகுதியில் இன்று நடந்தது. அப்போது படத்தின் சண்டைப் பயிற்சியாளராக இருந்து வந்த என்.சுரேஷ்(41) திடீரென ரோப் கயிறு அறுந்து விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காது அவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக கேளம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

‘அசுரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது நடிகர் சூரியை ஹீரோவாக்கி ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ‘விசாரணை’ படம் போலவே இந்த படத்தையும் வித்தியாசமாக இயக்கி வருகிறார் வெற்றிமாறன். ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தப்படம் தயாராகி வருகிறது. எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றி வந்த சுரேஷ் படப்பிடிப்பு தளத்தில் கயிறு அறுந்து விழுந்ததில் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து சம்பவம் படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.