நரம்பியல் நிபுணர் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜேம்ஸ் சதீஷ்குமாருக்கு புழல் சிறையில் முதல் வகுப்பு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
நிலப் பிரச்னை தொடர்பாக இருந்து வந்த முன்பகை காரணமாக 2013 ஆம் ஆண்டு டாக்டர் சுப்பையா சென்னையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஆசிரியர் பொன்னுசாமி, வழக்கறிஞர் பேசில், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மரண தண்டனையை உறுதி செய்வது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமையிலான அமர்வில் விசாரணையில் உள்ளது.
இதற்கிடையில் மரண தண்டனை அனுபவித்து வரும் டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், சிறையில் தனக்கு முதல் வகுப்பு வழங்க வேண்டுமென புழல் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் கொடுங்குற்றத்தில் ஈடுபட்டவருக்கு முதல் வகுப்பு வழங்குவதற்கு தமிழ்நாடு சிறை விதிகளின்படி தடை இருப்பதாக கூறி, முதல் வகுப்பு வழங்க முடியாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டாலும் அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு நிலுவையில் இருப்பதாகவும், மனுதாரர் மருத்துவர் என்பதாலும் சிறையில் அவருக்கு முதல் வகுப்பு வழங்கும்படி அரசுக்கு பரிந்துரைத்து மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளார்.