தருமபுரம் ஆதீன விவகாரத்தில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற தருமபுரம் ஆதீன மடம் செயல்பட்டு வருகிறது. பழமையான சைவ ஆதீனமாக விளங்கும் இந்த ஆதீனத்தின் ஆதீன கர்த்தராக இருந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி மறைந்தார். இதை தொடர்ந்து ஆதீனத்தின் 27வது ஆதீன கர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அதே ஆண்டு டிசம்பர் 13ம் பதவி ஏற்று ஞானபீடத்தில் அமர்ந்தார். அன்றைய தினமே தருமபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தபடி மனிதனை மனிதர்களே தூக்கும் பட்டினப்பிரவேச நிகழச்சி நடந்தது, வெள்ளிப் பல்லக்கில் புதிய ஆதீனகர்த்தர் அமரந்து வீதி உலா வந்தார். இந்த பல்லக்கை ஆதீனத்தில் உள்ள அடிதட்டு மக்கள் சுமந்தனர். இந்த பட்டினப்பிரவேச நிகழ்ச்சியில், ஆதீனங்களை பல்லக்கில் மனிதர்கள் சுமந்து செல்ல பெரியார் காலத்தில் இருந்தே எதிர்ப்புகள் எழுந்தபடி இருக்கிறது. அவரை தொடர்ந்து கி.வீரமணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் தருமபுரம் ஆதீனத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஆளும் திமுக சின்னம் சூரியன் என்றால் ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஒரு சூரியன் தான் என தருமபுரம் ஆதீனம் பேசி இருந்தார். தருமபுரம் ஆதீனத்தின் பேச்சு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்வதற்கு தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி திடீரென உத்தரவிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்து உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். இதன் பிறகு அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
தமிழ், சைவம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது தருமபுரம் ஆதீன மடம். இத்தகைய சிறப்பு வாய்ந்த மடத்தின் பட்டினப்பிரவேச விழாவின்போது ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கி செல்லும் நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் தடை விதித்துள்ளார்.
தருமபுரம் ஆதீனம் தற்போது மடத்தின் பாரம்பரியத்தையும், மரபுகளையும் காக்கும் இடத்தில் இருக்கிறார். கடந்த காலங்களில் இது போன்ற எதிர்ப்புகள் வந்தபோது எல்லா எதிர்ப்புகளையும் மீறி பட்டினப்பிரவேசம் என்கிற இந்த பாரம்பரிய நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வந்தது. திருமடங்களுக்கு என்று பல்வேறு பாரம்பரிய நிகழ்வுகளும், மரபுகளும் தனியாக உள்ளன. இதை தடை செய்வது என்பது தமிழக அரசாங்கம் இந்து சமய நிகழ்வுகளில் தலையிடும் செயல் ஆகும்.
சட்டப்படியும் கூட உதவி கலெக்டர் செய்த செயல் தவறானது. உடனடியாக இந்த தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும். வழக்கம் போன்று ஆதீனத்தின் பாரம்பரிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.