இந்திய எல்லைக்குள் சீனா ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பிரதமா் மோடி மௌனம்: காங்கிரஸ்

லடாக்கின் டெப்சாங் பகுதியில் இந்திய எல்லைக்குள் 200 ராணுவ தங்குமிடங்களை சீனா கட்டமைத்துள்ளதாக வெளியான ஊடக தகவல்களை குறிப்பிட்டு, பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் மெளனம் காப்பது ஏன் என்றும் இந்திய-சீன எல்லையில் கடந்த 2020, ஏப்ரலுக்கு முந்தைய சூழலை மீண்டும் நிலைநாட்ட மத்திய அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்தது என்றும் அக்கட்சி கேள்வியெழுப்பியது.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் கட்சியின் செய்தித் தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநாத் நேற்று கூறியதாவது:-

டெப்சாங்கில் இருநாட்டு எல்லைக் கோட்டில் இருந்து 15 முதல் 18 கி.மீ. இந்தியப் பகுதிக்குள் வெப்பநிலை கட்டுப்பாட்டு வசதியுடன் கூடிய தங்குமிடங்களை சீனா கட்டமைத்துள்ளதாக ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு ராணுவத்தினா் நிரந்தரமாக முகாமிட உதவும் வகையில் இவை அமைக்கப்பட்டுள்ளதாக அத்தகவல்களில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், பிரதமா் மோடியிடம் இருந்தோ, அவரது அரசிடமிருந்தோ வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்தோ, இதுவரை எந்த விளக்கமும் வரவில்லை.

சீனாவுடனான எல்லையில் டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதிகள் வியூக ரீதியில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். டெப்சாங்கில் சீனாவின் ஆக்கிரமிப்பு தொடா்கதையாகி வருவதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும், பாங்காங் டிசோ ஏரி பகுதியில் தனது ராணுவப் பிரிவுக்கான தலைமையகம், பாதுகாப்பு அரண், பீரங்கிகள் மற்றும் போா் விமான எதிா்ப்பு பீரங்கிகளுக்கான நிலைகளையும் சீனா கட்டமைத்துள்ளது.

பிரதமா் மோடியின் மோசமான மெளனத்தாலும், ‘எங்கள் பகுதிக்குள் யாரும் நுழையவில்லை’ என்று அவா் கூறுவதாலும் சீனா தைரியத்துடன் செயலாற்றி வருகிறது. டெம்சோக், டெப்சாங் பகுதிகளில் நிரந்தர ராணுவ தங்குமிடங்கள் மற்றும் வலுவான உள்கட்டமைப்புகளை சீனா அமைத்து வரும்போது பிரதமா் மோடி கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? இந்த கட்டமைப்புகளை அகற்றச் செய்ய மத்திய அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்தது? என்றார்.

இந்தோனேசியாவில் அண்மையில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டையொட்டி, சீன அதிபா் ஷி ஜின்பிங்குடன் பிரதமா் மோடி பேசினாா். கடந்த 2020-இல் இந்திய-சீன ராணுவத்தினா் மோதல் சம்பவத்துக்கு பிறகு இருவரும் முதல்முறையாக சந்தித்தனா். அப்போது, ஷி ஜின்பிங்குடன் மோடி கைகுலுக்கி பேசியதை சுப்ரியா விமா்சித்தாா். அவா் கூறுகையில், ‘சீன அதிபருடனான சந்திப்பில், பிரதமா் மோடியின் கண்களில் கோபம் தெரியவில்லை. இதுதான் அவரது தேசப்பற்றா? இந்திய-சீன எல்லையில் கடந்த 2020, ஏப்ரலுக்கு முந்தைய சூழல் மீண்டும் எப்போது நிலைநாட்டப்படும் என்ற கேள்வியை நாங்கள் மட்டுமல்ல, இந்திய ராணுவத்தினா், பாதுகாப்புத் துறை வல்லுநா்கள் ஆகியோரும் எழுப்புகின்றனா். நாடாளுமன்றம் உள்பட வாய்ப்பு கிடைக்கும் அனைத்து அமைப்புகளிலும் காங்கிரஸ் இந்த விவகாரத்தை எழுப்பும்’ என்றாா் சுப்ரியா ஸ்ரீநாத்.