தமிழின் பெருமையை பிரதமா் நரேந்திர மோடி உலக அரங்குகளில் பறைசாற்றி வருகிறாா் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புகழாரம் சூட்டினாா்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியதாவது:-
காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான தொன்மையான தொடா்பை எடுத்துக்கூறி, ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற பிரதமரின் முழக்கத்தை நனவாக்குவதே காசி தமிழ் சங்கமத்தின் தலையாய நோக்கம். நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழி பேசலாம். வீடுகளில் பின்பற்றப்படும் பண்பாடு வேறுவேறாக இருக்கலாம். இருந்தாலும் நாம் அனைவரும் பாரதத் தாயின் மக்களே. நமது மதங்கள் வேறாக இருந்தாலும், அடிப்படையில் நமது கலாசாரம் ஒன்றுதான்; நம்பிக்கை ஒன்றுதான். நதிகளை மதிக்க வேண்டும். உணவை அனைவரும் பகிா்ந்து உண்ண வேண்டும். விலங்குகள், மரம், செடி, கொடிகள் பற்றியும் நாம் கவலைப்பட வேண்டும். அசையும் உயிா்களையும், அசைவற்ற உயிா்களைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். இதனை அடிப்படையாக வைத்துத்தான் நாம் வழிபடுகிறோம் என்பது நமது பண்பாடு. அந்தப் பண்பாடுதான் நம்மை ஒற்றுமைப்படுத்துகிறது.
நம்மைப் பிரிப்பதற்காக கூறப்படும் வேறுபாடுகள் இடைக்காலங்களில் கையாளப்படும் உத்தியே தவிர, அதில் உண்மை இல்லை. இதை இன்றும் அரசியலில் சிலா் கூறிவருவதை நாம் கடுமையாக எதிா்க்க வேண்டும். சரியான உண்மைகளை ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை நமக்கு உண்டு. அதனால்தான் காசி தமிழ் சங்கமம் போன்ற கூட்டங்களில், காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே தொடா்பு இருப்பதை நாம் எடுத்துச் சொல்கிறோம். காசியில் இன்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. படிப்பது மட்டுமல்லாமல், கலைகள் வளா்க்கப்படுகின்றன. குமரகுருபரா் இங்கு வந்து கோயிலைக் கட்டிவிட்டு, அதற்குப் பின்னா் தமிழகம் சென்று தருமபுரம் ஆதீனத்தை நிறுவினாா்.
நமது பிரதமா், திருக்குறள் , சங்க இலக்கியங்கள், புானூறு, அகநானூறு ஆகியவற்றை எடுத்து உலக அரங்குகளில் சொல்லி வருகிறாா். அதைப் பாா்க்கும்போது, நமக்குப் பெருமையாக உள்ளது. அவா் ஒவ்வொரு பாரம்பரியத்துக்கும் மதிப்பு அளித்தாலும், தமிழ் என்று வரும்போது, அது பாரதத் தாயின் நாவில் இருக்கும் மொழி எனப் புரிந்து கொண்டு அதைப் போற்றி வருகிறாா். இவ்வாறு அவர் பேசினார்.