இயக்குனர் பாலா வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகுவதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர்களை கொண்டிருப்பவர் இயக்குனர் பாலா. விக்ரம் நடிப்பில் வெளியான சேது படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த பாலா தன் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க செய்தார். மேலும் இப்படத்திற்காக தேசிய விருதையும் தட்டி சென்றார் பாலா. அதைத்தொடர்ந்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் போன்ற தரமான படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார்.
இந்நிலையில் சமீபகாலமாக பாலா இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பாலா இயக்கிய வர்மா திரைப்படத்தில் ஏற்பட்ட பிரச்சனை பாலாவை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியது. எனவே மிகப்பெரிய ஒரு வெற்றிப்படத்தை கொடுத்து தான் யார் என நிரூபிக்கும் முனைப்பில் இருக்கின்றார் பாலா. அந்த வகையில் சூர்யாவை வைத்து வணங்கான் என்ற படத்தை துவங்கினார். அப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதற்கு சூர்யா மற்றும் பாலா இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் காரணம் என பேசப்பட்டது. ஆனால் இந்த வதந்தியை சூர்யா தரப்பு மறுத்தது. இதையடுத்து இப்படத்தின் நிலை என்ன என்பதே தெரியாமல் இருந்தது. சூர்யா அடுத்தடுத்த படங்களில் பிசியாக இப்படத்தை கண்டுக்காமல் இருந்தார். மேலும் பாலா வணங்கான் படத்தின் கதையை மாற்றி எழுதி வருகின்றார் எனவும் தகவல் வந்தது.
இந்நிலையில் தற்போது இயக்குனர் பாலா வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகுவதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக படத்தின் இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
வணக்கம். என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும், இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது. எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. நந்தாவில் நான் பார்த்த சூர்யா பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி வணங்கான் பணிகள் தொடரும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாலாவின் இந்த அறிக்கைக்கு சூர்யாவின் 2டி நிறுவனம் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், “பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து சூர்யா அவர்களும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் வணங்கான்-ல் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம்” என்று பதிவிட்டுள்ளது.