குஜராத்தில் தமிழ் பள்ளியை காப்பாற்றாத மோடியா, தமிழ் மொழியை காப்பாற்ற போகிறார்: வேல்முருகன்

குஜராத்தில் தமிழ் பள்ளியை காப்பாற்ற முடியாத மோடியா, தமிழ் மொழியை காப்பாற்ற போகிறார் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மில் வேலைக்காக குஜராத்திற்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள், 1990 தொடக்கத்தில் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களின் குழந்தைகள் கல்வி கற்க ஏதுவாக, குஜராத்தில் உள்ள சில பகுதிகளில், 1910-ம் ஆண்டில் தமிழ் வழி பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அகமதாபாத்தில் நூறு ஆண்டுக்கு மேலாக செயல்பட்டு வந்த தமிழ் பள்ளிகள், கடந்த 2 ஆண்டுக்கு மேலாக மூடப்பட்டு இருப்பதாக வெளியான செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தனது சொந்த மாநிலமான குஜராத்தில் தமிழ் பள்ளியை காப்பாற்ற முடியாத மோடியா, தமிழ் மொழியை காப்பாற்ற போகிறார். எனவே, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு, தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க, குஜராத் அரசை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.