பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா அறிவிப்பு!

பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா சிவா தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

திமுக மாநிலங்களவைத் தலைவர் திருச்சி சிவாவின் மகனான சூர்யா சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். அவருக்கு மாநில ஓபிசி அணி தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதற்கிடையே, பாஜக சிறுபான்மையினர் அணி தலைவராக இருக்கும் டெய்சி சரணை தொலைபேசியில் தொடர்பு கொண்ட திருச்சி சூர்யா அவதூறாக பேசும் ஆடியோ சமூக ஊடகங்களில் கடந்த மாதம் வைரலானது. இதனைத் தொடர்ந்து, கட்சி பொறுப்புகளிலிருந்து திருச்சி சூர்யாவை 6 மாத காலம் இடைநீக்கம் செய்து மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டார்.

இந்நிலையில், பாஜகவிலிருந்து விலகுவதாக திருச்சி சூர்யா இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

அண்ணன் அண்ணாமலைக்கு நன்றி. இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும். அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.