6-வது விரலான ஆளுநர் எதற்கு? வெட்டி எறிந்துவிடுவோம்: சீமான்

தமிழகத்திற்கு கவர்னர் தேவையில்லை எனவும், எங்களுக்கு ஐந்து விரல் போதும், ஆறாவது விரலான கவர்னர் தேவையில்லை, வெட்டி எறிய வேண்டுமு் என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

அண்ணல் அம்பேத்கர் 66ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை, அடையாறில் அமைந்துள்ள, அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:-

அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய நினைவைப் போற்றுகிற நாள் இன்று. “சாதிய இழிவைத் துடைத்தெறியப் போராடாமல் இருப்பதைவிட, செத்து ஒழிவதே மேலானது. நான் யாருக்கும் அடிமை இல்லை, எனக்கும் யாரும் அடிமை இல்லை. கோயில்களில் எப்போதும் ஆடுகளைத் தான் பலியிடுகிறார்களே ஒழிய சிங்கங்களை அல்ல” என்பது போன்ற புரட்சிகர பொன்மொழிகளை எங்களைப் போன்ற பிள்ளைகளுக்குப் போதித்தப் புரட்சியாளர். சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து சமன்படுத்தாது, சமூக முன்னேற்றம், சமூக மேம்பாடு என்று பேசுவதெல்லாம் சாக்கடைக்குழியின் மேலே போடுகிற மல்லிப் பந்தலுக்கு ஒப்பானது என்று போதித்தப் பேராசான். இந்த நாட்டின் பெருமையே அண்ணல் காந்தியடிகளும், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் தான்.

புதிதாகக் கட்டப்படுகிற இந்திய ஒன்றியப் பாராளுமன்ற கட்டிடத்திற்குப் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடையப் பெயரை வைப்பதே பொருத்தமாக இருக்கும் என்று நாங்கள் பலமுறை வலியுறுத்தியுள்ளோம். அவர் நினைவு நாளான இன்று அந்தக் கோரிக்கையை மீண்டும் நாங்கள் வலியுறுத்துகிறோம். அது அவருக்குப் பெருமையல்ல, மாறாக இந்த நாட்டிற்கும், நாட்டின் குடிகளுக்கும் தான் பெருமை. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய நினைவைப் போற்றுகிற இந்நாளில், பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கிற, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பாகுபாடு பாராட்டுகிற இந்த கோட்பாட்டைத் தகர்த்து, ஒரு சமநிலைச் சமூகம் படைக்க வேண்டும் என்கிற உறுதியை, அதற்காகப் போராடுகிறோம் என்ற உறுதியை, இந்நாளில் நாங்கள் ஏற்கிறோம். அதுதான் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு நாங்கள் செலுத்துகிற உண்மையான புகழ் வணக்கமாக இருக்க முடியும். அப்படி உளமார அவர் கோட்பாட்டை நேசித்து நிற்கிற பிள்ளைகள் நாங்கள், எங்களுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறோம்.

அறிவு ஆசான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கானத் தலைவர் அல்ல. மானுடச் சமூகம் எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டு, வீழ்த்தப்பட்டு, தாழ்த்தப்பட்டுக் கிடக்கிறதோ, அவர்கள் எல்லோருக்குமான ஒரு தத்துவம், பொதுத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் என்பதை தமிழ் இளம் தலைமுறையினர் புரிந்து உணர வேண்டும். அப்படி புரிந்து உணர்ந்து நிற்கிற பிள்ளைகள்தான் நாம் தமிழர் பிள்ளைகள். அந்த அடிப்படையில் நாங்கள் எங்கள் அறிவு ஆசான் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு எங்கள் புகழ் வணக்கத்தைச் செலுத்துவதில் பெருமை அடைகிறோம்.

ஓட்டுக்காக மட்டுமே அம்பேத்கர் பற்றி பா.ஜ., பேசி வருகிறது. ஓட்டுக்காக எந்த அளவிற்கும் பா.ஜ., செல்லும். வல்லபாய் பட்டேலுக்கு எதற்காக ரூ.3,000 கோடியில் சிலை வச்சாங்க?. நாட்டின் பெருமை காந்தியா? அம்பேத்கரா? வல்லபாய் பட்டேலா? இந்தியாவை தாண்டி வல்லபாய் பட்டேலை யாருக்காவது தெரியுமா? என்றார்.

குஜராத் தேர்தலில் பா.ஜ., வெற்றிப்பெறும் என கருத்துக்கணிப்பு தெரிவிப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‛இந்த வெற்றிக்கு விஷம் குடித்து சாகலாம். தமிழகத்தில் எல்லா இடங்களிலும் வட மாநிலத்தவர்கள் தான் இருக்கின்றனர். தமிழகத்தில் உள்ள வட மாநிலத்தவர்களுக்கு ஓட்டுரிமை கொடுக்க கூடாது. தமிழகத்திற்கு கவர்னர் தேவையில்லை. எங்களுக்கு ஐந்து விரல் போதும். ஆறாவது விரலாக கவர்னர் உள்ளார். அதான் பிரச்னை; அதனால் தான் மோதல் போக்கு ஏற்படுகிறது. அதனை வெட்டி எறியவேண்டும். கருணாநிதி, ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இருந்த போது ஆளுநர்கள் இருந்த இடம் தெரியாது. இப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு முடிவுக்கு ஒத்துழைக்காமல் கோப்புகளில் கையெழுத்திடாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார். தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்கு ஒத்துழைப்பது இல்லை. ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான சட்டத்திற்கு ஏன் கையெழுத்து போடவில்லை? காசு வாங்கிட்டு கமிஷன் வாங்கிட்டு இருக்கிறார்.

பார்லிமென்ட் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் ஆண்கள், 20 தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.