திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே கைது!

மோர்பி தொங்கு பாலம் விபத்தை பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடி வருகைக்காக 30 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலேயே குஜராத் மாநில போலீசார் கைது செய்தனர்.

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் மச்சு ஆற்றின் குறுக்கே கேபிள் பாலம் இருந்தது. இந்த தொங்கு பாலம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி, மோர்பி பாலம் அறுந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. அப்போது பாலத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில், சுமார் 135 பேர் ஆற்றுக்குள் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மோர்பி பால விபத்தில் காயம் அடைந்தவர்களை, பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் மாதம் 1 ஆம் தேதி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில், மோர்பி தொங்கு பாலம் விபத்தை பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடி வருகைக்காக, குஜராத் மாநில அரசு 30 கோடி ரூபாய் செலவு செய்ததாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்ததாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே செய்தி வெளியிட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாவது:-

மோர்பிக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்து சென்ற சில மணி நேரத்திற்கு 30 கோடி ரூபாய் செலவானதாக ஆர்.டி.ஐ மூலமாக தெரிய வந்துள்ளது. அதில் ரூ.5.5 கோடி வரவேற்பு, நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் போட்டோவுக்காக செலவாகி உள்ளது. உயிரிழந்த 135 பேரின் குடும்பத்தாருக்கு நிவாரணமாக தலா ரூ.4 லட்சம் என மொத்தம் ரூ.5 கோடி அளவிற்கே செலவாகி உள்ளது. இதைவிட பிரதமர் மோடி வந்து சென்ற செலவு அதிகம். இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலேயின் இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதை அடுத்து, இந்தத் தகவலை, பிரஸ் இன்பர்மேஷன் பீரோவின் (பி.ஐ.பி) உண்மை கண்டறியும் குழு ஆராய்ந்ததில், இந்த தகவல் போலியானது என்றும், ஆர்.டி.ஐ இது போன்ற எந்த தகவலும் அளிக்கவில்லை என்றும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, போலி செய்தி பரப்பிய புகாரின் அடிப்படையில், திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலேவை, ஜெய்ப்பூரில் குஜராத் மாநில போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.

இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், சாகேத் கோகலே கைது செய்யப்பட்ட சம்பவம் மிகவும் மோசமானது. அவர் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானவர். அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. பாஜக அரசின் இந்த பழிவாங்கும் போக்கை கண்டிக்கிறேன். சாகேத் பிரதமருக்கு எதிராக டுவீட் செய்ததால் கைது செய்யப்பட்டு உள்ளார் என்று கூறினார்.