சிலம்பரசனுக்கு திருமணம் அனைவரின் ஆதரவுடன் விரைவில் நடக்கும் எதிர்பார்க்கிறேன்: டி.ராஜேந்தர்

எனது மகன் சிலம்பரசனுக்கு பிடித்த திருமகளை குலமகளை தேர்வு செய்யும் பொறுப்பை இந்த வழக்கறுத்தீஸ்வரிடமே விட்டு அது குறித்த கோரிக்கையை வைத்துள்ளேன் என்று அவரது தந்தை டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவரும், இலட்சிய திமுகவின் நிறுவனம்,தலைருமான டி ராஜேந்தர் இன்று கோவில் நகரமான காஞ்சிபுரத்தில், வழக்குகளை தீர்க்கும் தளமாக விளங்குகின்ற பிரசித்திப்பெற்ற ஸ்ரீ வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் மற்றும் காமாட்சி அம்மன் திருக்கோயில் சாமி தரிசனம் மேற்கொண்டார். காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலுக்கு வருகை புரிந்த டி.ராஜேந்தர் தனது மகன் ஜாதகத்தை வைத்து சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து நவகிரக வழிபாடு மற்றும் மூன்று முறை கோயிலை வலம் வந்து, கொடிமரம் அருகே விழுந்து மிகுந்த பயபக்தையுடன் தனது வேண்டுதலை கோரிக்கையாக வைத்தார். திருமண தடை நீங்க தீபம் அதன் பின் மூன்று நெய் தீப விளக்கு ஏற்றி கொடிமரம் , மூலஸ்தானம் அமைந்த பகுதியை நோக்கி தீப பூஜை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து 12 திருவிளக்கு ஏற்றியும்,கோவில் நந்தி பகவானிடம் தனது வேண்டுதலை மனமுருகி வேண்டி க்கொண்டார்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், தான் மறுபிறவி எடுத்துள்ளதாகவும், கடந்த முறை பீப் பாடல் பிரச்சனையின்போது இங்கு வந்து தனது குறைகளை வழக்கறுத்தீஸ்வரரிடம் கோரிக்கையாக வைத்த நிலையில்,சுமுகமாக பிரச்சனை தீர்ந்தது என்று கூறினார். இதனைத் தொடர்ந்து சிலம்பரசன் திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதில் அளித்த டி.ராஜேந்தர், எனக்கு எனது மனைவிக்கு பிடித்த பெண் என்பதை தவிர்த்து எனது மகன் சிலம்பரசனுக்கு பிடித்த திருமகளை, குலமகளை தேர்வு செய்யும் பொறுப்பை இந்த வழக்கறுத்தீஸ்வரிடமே விட்டு அது குறித்த கோரிக்கையை வைத்துள்ளேன். இந்த கோரிக்கையை அவர் சிறப்பாக நிறைவேற்றுவார் என்பதும் , இதேபோல் சிலம்பரசன் திருமணத்தை அவரது ரசிகர்கள் உள்ளிட்ட நல் உள்ளங்கள் அனைவரின் ஆதரவுடன் விரைவில் நடக்கும் எதிர்பார்க்கிறேன் எனவும் தெரிவித்தார்.