எல்லை பிரச்சனையால் கர்நாடகா-மகாராஷ்டிராவில் தொடர்ந்து பதற்றம்!

கர்நாடகா-மகாராஷ்டிரா இடையே எல்லை விஸ்வரூபம் அடைந்துள்ள நிலையில் 2 மகாராஷ்டிரா அமைச்சர்கள் பெலகாவி வர எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் பெரும் போராட்டம் நடத்தினர். மேலும் மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட லாரி உள்ளிட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.

கர்நாடகா-மகாராஷ்டிரா மாநிலங்கள் அண்டை மாநிலங்களாக உள்ளன. கர்நாடகா-மகாராஷ்டிரா மாநிலங்களை பிரிக்கும் வகையில் பெலகாவி மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டம் தற்போது கர்நாடகாவுடன் உள்ளது. இந்த மாவட்டத்தில் கன்னட மொழி பேசும் மக்களை போல் மராத்தி மொழி பேசும் மக்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சில பகுதிகள் மகராஷ்டிராவுக்கு சொந்தம் என மகாராஷ்டிரா மாநில அரசு கூறி வருவதோடு அந்த பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என கூறி வருகிறது. இதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடகாவின் எந்த பகுதிகளையும் மகராஷ்டிராவுடன் இணைக்க முடியாது எனக்கூறி வருகிறது. கர்நாடகா-மகாராஷ்டிரா இடையேயான இந்த பிரச்சனை என்பது கடந்த 60 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தான் சமீபத்தில் இந்த எல்லை பிரச்சனை மீண்டும் கிளம்பியது. சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் உள்ளவர்கள் பெலகாவி மாவட்டத்தை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என கூறினர். மேலும் அங்கு சென்ற கர்நாடக பதிவெண் கொண்ட வாகனத்தை சேதப்படுத்தியதோடு, பெலகாவி மகராஷ்டிராவின் பகுதி என கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்களில் எழுதி அனுப்பினர். இதற்கு கர்நாடகா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதோடு இந்த சம்பவம் இருமாநிலங்களுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தின. இந்த பதற்றத்தை தொடர்ந்து இருமாநிலங்களுக்கு இடையேயான பொதுச்சேவைகள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் தான் கர்நாடகா-மகாராஷ்டிரா எல்லை பிரச்சினை தொடர்பாக மகாராஷ்டிரா அமைச்சர்கள் 2 பேர் பெலகாவிக்கு வந்து மராட்டிய அமைப்பினரை சந்தித்து பேச முடிவு செய்தனர். மகாராஷ்டிரா அமைச்சர்கள் சந்திரகாந்த் பாட்டீல், சம்புராஜ் தேசாய் ஆகியோர் கர்நாடகாவின் பெலகாவிக்கு வருவதாக அறிவித்தனர். இதற்கு கர்நாடக அரசு கண்டனம் தெரிவித்தது. அமைச்சர்கள் கர்நாடகத்துக்கு வரக்கூடாது என அரசு சார்பில் கூறப்பட்டது. மேலும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு செய்தனர். இருப்பினும் 2 அமைச்சர்களும் நேற்று பெலகாவி வருவதாக இருந்தது. இதையடுத்து பதற்றம் ஏற்பட்டது. 144 தடை உத்தரவு போடப்பட்டது. இருந்தாலும் கூட கன்னட அமைப்பினர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக ரக்‌ஷண வேதிகே அமைப்பு பெலகாவியில் நேற்று போராட்டம் நடத்தியது. மகாராஷ்டிரா லாரிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. டயரில் இருந்து காற்று வெளியேற்றப்பட்டது. அதோடு மராத்தி மொழி எழுத்துகளை அழித்தனர். மேலும் லாரிகள் மீது ஏறி கன்னட அமைப்பினர் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் மகாராஷ்டிரா அமைச்சர்களின் வருகை ரத்து செய்யப்பட்டது. இதேபோல் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சிவசேனா கட்சியினர் கர்நாடக வாகனங்களை வழிமறித்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்த மகராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மகாராஷ்டிரா வாகனங்கள், மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை பசவராஜ் பொம்மை ஏற்றுக்கொண்டார். இருப்பினும் கர்நாடகா-மகாராஷ்டிரா இடையேயான எல்லை பிரச்சனையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால் இருமாநிலங்கள் இடையேயான போக்குவரத்து இயல்பு நிலையில் இல்லாமல் உள்ளது. அதோடு பெலகாவியில் பிரச்சனைக்குரிய இடங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.