ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகம் போல் செயல்படுகிறது: முத்தரசன்

தமிழக ஆளுனர் மாளிகை பாஜக அலுவலகம் போல் செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

தமிழக ஆளுனரை திரும்பபெற வலியுறுத்தி வரும் 29 ம்தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுனர் மாளிகையை முற்றுகையிட உள்ளதால், அது குறித்து தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

ஜி 20 மாநாட்டை தலைமை தாங்கி நடத்த இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. ஆனால் இந்த ஜி 20 மாநாடு கொடியில் பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை சின்னம் பொரிக்கப்பட்டுளளது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தேர்தல் ஆணைய தலைவர் நியமனம் குறித்து உச்சநீதி மன்றம் எழுப்பியுள்ள கேள்வி சாதாரணமானது இல்லை. தற்போது தலைமை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர், அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற 24 மணி நேரத்தில், அவருக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த அவசரம் என உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. இதற்கு பாஜக நேர்மையாக பதில் கொடுக்க வேண்டும். இதனை நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும். தற்போது தேர்தல் ஆணையராக இருப்பவர்கள் பாஜகவின் கட்டளையை தீர்மானிப்பதாக தான் செயல்படுகிறார்கள். பாஜகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். மேலும் தேர்தல் தேதிகளை பாஜக தான் முடிவு செய்கிறது. இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து.

நம்முடைய முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடுவை பாராட்டி சென்னையில் விழா நடத்தப்பட்டது. அதில் வெங்கையா நாயுடு பேசும் போது, எந்த மொழியையும் திணிக்க கூடாது. இதனை நான் ஏற்கமாட்டேன் என தெரிவித்துள்ளார். இதை வெங்கைய்யா நாயுடு பல முறை பேசியுள்ளார். ஆனால் காசி தமிழ்ச்சங்க விழாவில், அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவில், இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி பயன்படுத்த தீர்மானம் நிறைவேற்றி, குடியரசு தலைவருக்கு கொடுத்தள்ளனர். இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமிழுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என, தமிழை புகழ்ந்து பேசியுள்ளார். மோடியின் இந்த செயலை வரவேற்கிறேன். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக பாஜக ஆட்சியில், சமஸ்கிருதத்ததிற்கு 222 கோடி ஒதுக்கி விட்டு, தமிழுக்கு 22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளம் ஒன்று, உதடு ஒன்று பேசுகிறது.

தமிழக ஆளுநர் ரவி, ஆளுநர் மாளிகையை பாஜக அலுவலகமாக நடத்துகிறார். இங்கு போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறார். அரசியல் சாசனத்தின் படி செயல்பட வேண்டிய ஆளுநர், தமிழக அரசு கொடுக்கின்ற மனுதாக்கல் கிடப்பில் உள்ளது. ஆனால் பிரதமர், குடியரசு தலைவர்கள் பாதுகாப்பு என்பது மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தொடர்பானது. ஆனால் பிரதமர் வரும்போது தமிழக அரசு உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவிக்கிறார். இதை ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவிடம் தான் கேட்க வேண்டும். ஆனால் ஆளுநரிடம், அண்ணாமலை கொடுக்கும் புகார் மீது உடனடியாக விளக்கம் கேட்டு, தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்புகிறார்.

மேலும் ஆளுநர் ரவி, எல்லா நாடும் ஏதோ ஒரு மதத்தின் அடிப்படையில் இருக்கிறது. இந்தியா இந்து மதத்தை சார்ந்துள்ளது. புதிய கல்வி கொள்கை செயல்படுத்த வேண்டும் என ஆளுநர் ரவி பேசி வருகிறார். இதனால் ஆளுநர் ரவியின் செயல்பாடு ஏற்புடையதல்ல. இதனால் வருகிற டிசம்பர் 29-ம், மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி, ஆளுநர் மாளிகையை, பல்லாயிரக்கணக்கானோரை திரட்டி, இந்தி கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.