பிரபல ஓவியர் மனோகர் தேவதாஸ் காலமானார்!

பிரபல ஓவியரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான மனோகர் தேவதாஸ் (86) நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 86. அவருக்கு இறுதி சடங்குகள் சென்னை சாந்தோமில் உள்ள மகளின் வீட்டில் இன்று நடைபெறுகிறது.

பாரம்பரிய கட்டடங்களை வரையும் ஆற்றல் மிகு கலைஞராக அறியப்படுபவர் மனோகர் தேவதாஸ். இவர் ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற விழித்திரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் நேற்று அதிகாலை காலமானார். இவரது மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மதுரை எம்பி சு வெங்கடேசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த 1938 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் மனோகர் தேவதாஸ். இவர் 30 வயதில் ரெட்டினிஸ் பிக்மென்டோசா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 83 வயதில் முழு பார்வை திறணையும் இழந்தார். எனினும் பாரம்பரிய கட்டடங்களை வரையும் தனது கலைப் பணியை தொடர்ந்து வந்தார். மேலும் கிரீன் வெல் இயர்ஸ், மல்டி ஃபேக்ட்ஸ் ஆஃப் மை மதுரை, நிறங்களின் மொழி, டிரீம்ஸ் போன்ற பல நூல்களையும் எழுதியுள்ளார். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு மனைவி மஹிமா பெயரில் நிறுவப்பட்ட தொண்டு நிறுவனம் மூலம் கிராம மக்களின் கண் சிகிச்சைக்கு உதவி வந்தார். இவருக்கு 2020 ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை சு வெங்கடேசன் தனது இரங்கல் பதிவில், வாழ்க்கை கண்ணொளியை பறித்து இருளில் தள்ளிய பொழுதும் தனது ஓவியத்தின் மூலம் புது உலகை படைத்துக்காட்டி தன்னம்பிக்கையின் ஒளியாய் சுடர்விட்ட மகாகலைஞன் மனோகர் தேவதாஸ் காலமானார். ஓவியமா.. புகைப்படமா என வியக்க வைத்த திறமைசாலி.. மதுரையின் பொக்கிஷம் மறைந்தது. கண்ணீர் சிந்துவது உங்களுக்கு பிடிக்காது. ஆனால் இந்த வரியை எழுதும் பொழுது வழிந்தோடும் கண்ணீரை அடக்க முடியவில்லை. மன்னியுங்கள் மனோ ஆழ்ந்த இரங்கல் என சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.