10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான ரிட் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த இடஒதுக்கீடு செல்லும் என கடந்த மாதம் 7-ந் தேதி தீர்ப்பு கூறியது. இந்நிலையில் இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:-
பொருளாதாரத்தின் அடிப்படையில் மட்டுமே, பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதாக பெரும்பான்மை தீர்ப்பு தவறான ஊகத்தின் அடிப்படையில் உள்ளது. குடும்ப வருவாய், பொருளாதார நலிவு, இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகிய பிரிவினர் அல்லாதவர்கள் ஆகிய இரு அளவீட்டு விதிகளின் அடிப்படையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீடு என்றால், அந்த இடஒதுக்கீடு பொருளாதாரத்தில் நலிந்த அனைத்து பிரிவினருக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த இடஒதுக்கீடு கிரீமிலேயர் விலக்கு அளித்து, முற்பட்ட சாதியினருக்கும், முன்னேறிய பிரிவினருக்கானதாகவும் உள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீடு பொருளாதார இடஒதுக்கீடாக அல்லாமல், சமூக, சாதிகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. முன்னேறிய பிரிவினருக்கு ஆதரவான மத்திய அரசின் நடவடிக்கை, அரசமைப்பு சாசனத்தின் அடிப்படையை மீறுகிறது என்ற வாதத்தை பெரும்பான்மை தீர்ப்பு கருத்தில் கொள்ளவில்லை. நீதிபதி ஜே.பி.பார்திவாலா அளித்த தீர்ப்பில், இதர பிற்படுத்தப்பட்டோர் அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ளதாகவும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு வரம்பில்லாமல் இருப்பதாகவும் தவறாக தெரிவித்துள்ளார். எனவே, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.