தென்காசிக்கு ரயிலில் சென்ற முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தென்காசி மாவட்டத்திற்கு முதன்முறையாகச் செல்ல இருக்கும் முதல்வர் ஸ்டாலின், விமானம் மற்றும் சாலை வழி பயணத்தை தவிர்த்து முதன்முறையாக ரயில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தென்காசி மாவட்டத்திற்கு முதன்முறையாகச் செல்ல இருக்கிறார். தென்மாவட்டங்களுக்கு விமானம் மூலம் எப்போதும் முதல்வர் பயணம் செய்வார். ஆனால் தென்காசி பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல் முறையாக ரயில் மூலம் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று இரவு 8.40 மணிக்குச் சென்னை எழும்பூரிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸில் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த ரயிலில் தமிழக முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோரும் பயணம் செய்துள்ளனர். முன்னதாக சென்னையில் முகாம் அலுவலகத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையம் வந்த தமிழக முதல்வர் அமைச்சர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

எழும்பூரிலிருந்து புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் இன்று காலை 7.30 மணிக்கு இந்த ரயில் தென்காசிக்கு சென்றடையும். ரயில் நிலையத்திலிருந்து குற்றாலம் செல்லும் முதல்வர், அங்குள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு அதன் பின்னர் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதன் பிறகு மதுரைக்குச் சென்று இரவு மதுரையில் தங்குகிறார். மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட பிறகு விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார்.

இந்நிலையில் தமிழக பொதிகை ரயிலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோரும் பயணம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தென்காசி பயணத்திற்காக பொதிகை ரயிலில் சலூன் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. சலூன் பெட்டி என்பது நகரும் வீடு போன்றது. அனைத்து வசதிகளுடன் கூடிய 2 பெட்ரூம், பெரியஹால், டைனிங் டேபிள், உட்கார சோபா, நாற்காலி, சமையலறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இதில் உண்டு. ரயில்வே நிர்வாகம், குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், ஆளுநர், முதலமைச்சர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்களுகாக இந்த வசதிகள் கொண்ட தனிப்பெட்டியை உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தென்காசி ரயில் நிலையத்தில் அதிகாலையிலேயே திரளாக திரண்டு வந்த திமுகவினர் கட்சிக்கொடிகளை கைகளில் ஏந்தி கொட்டும் பனியில் நின்றுக் கொண்டு வரவேற்புக் கொடுத்தனர். அவர்களின் வரவேற்பை ஏற்கும் வகையில் சிறிது தூரம் முதல்வரும் நடந்தே சென்றார்.

குற்றாலத்தில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் மட்டும் ஓய்வெடுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அதன் பிறகு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று சுமார் ஐம்பதாயிரம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குகிறார். அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கார் மூலம் ராஜபாளையம் புறப்பட்டுச் செல்லும் அவர் அங்கு மதிய உணவு சாப்பிடுகிறார்.