தேர்தல் முடிவுகள்: குஜராத், ஹிமாச்சல் மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!

குஜராத், ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்துத் தெரிவித்து உள்ளார்.

68 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக – காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சிகளிடையே போட்டி நிலவியது. தேர்தலில் மூன்று கட்சிகள் போட்டியிட்டாலும், பாஜக – காங்கிரஸ் இடையே தான் இரு முனை போட்டி நிலவியது. இதே போல், 182 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த 1 ஆம் தேதி முதற்கட்டமாக 89 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதம் உள்ள 93 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, கடந்த 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ஆளும் பாஜக – காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவியது.

இந்நிலையில் இன்று, ஹிமாச்சலப் பிரதேசம், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இதில், குஜராத் மாநிலத்தில் பாஜக இதுவரை இல்லாத வகையில் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.182 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 156 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் ஏழாவது முறையாக அமர உள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 17 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலைக் காட்டிலும் காங்கிரஸ் சுமார் 61 இடங்களை கோட்டை விட்டுள்ளது.

அதே சமயம், ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில், பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளது. மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 40 இடங்களில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சி அரியணையில் அமர உள்ளது.

இந்நிலையில், குஜராத், ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து, டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில், தொண்டர்களிடையே, பிரதமர் நரேந்திர மோடி உரை ஆற்றியதாவது:-

தேர்தலை அமைதியாக நடத்தியதற்காக தேர்தல் கமிஷனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்குத் தெரிந்தவரை எந்த வாக்குச் சாவடியிலும் மறு வாக்குப்பதிவு தேவையில்லை. ஹிமாச்சலப் பிரதேச மாநில வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பாஜக மற்றும் காங்கிரஸ் இடையேயான வாக்கு வித்தியாசம் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் போது எனது சாதனையை முறியடிக்க வேண்டும் என்று குஜராத் மக்களிடம் கூறியிருந்தேன். அதை தற்போது நீங்கள் நிரூபித்து காட்டி உள்ளீர்கள். குஜராத் வரலாற்றில் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றியை வழங்கி அனைத்து சாதனைகளையும் முறியடித்த குஜராத் மக்களுக்கு நன்றி. வளர்ந்த இந்தியாவிற்கான சாமானியனின் ஆசை எவ்வளவு வலிமையானது என்பதை குஜராத் முடிவுகள் நிரூபித்து உள்ளன. நாட்டின் முன் ஒரு சவால் வரும்போதெல்லாம் மக்கள் பாஜக மீது நம்பிக்கை காட்டுகிறார்கள் என்ற செய்தி தெளிவாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.