கொடைக்கானலில் சுற்றுலா பகுதிகளுக்கு செல்லத் தடை!

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலவியுள்ள மாண்டஸ் புயல் இன்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் இன்றைய தினம் அந்த வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகத்தால் கொடைக்காநலில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. அதுபோல் மின்கம்பங்களும் சாய்ந்துவிட்டன.

கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். தொடர் மழை காரணமாக இன்று இந்த சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என்று வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த சுற்றுலா இடங்கள் அனைத்தும் மூடப்படுவதாகவும், புயல் மழை குறைந்த உடன் இந்த சுற்றுலா இடங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் நகர் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் தற்காலிகமாக படகு சவாரி நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.