ஆதார் எண் இணைக்கும் போது 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்து செய்யப்படும் நிலை இருக்கிறது எனவும், இதற்கு நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என முன்னாள் அமைச்சர் தங்கமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக அரசு மின்சார எண்ணுடன் ஆதாரை இணைக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்காக பயனர்கள் எளிதில் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கும் வசதியை ஆன்லைனில் செய்துள்ளது. இந்நிலையில், ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளுக்கு மேல் மின் இணைப்பு வைத்திருக்கும் பயனர்கள், ஒரே ஆதார் எண்ணை ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பு எண்களுடன் இணைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த வீட்டிற்கு உரிமையாளரா அல்லது வாடகைக்கு குடியிருப்போரா அல்லது நீங்கள் அந்த வீட்டின் உரிமையாளர் ஆனால் மின் இணைப்பு வேறு ஒருவர் பெயரில் உள்ளதா என்ற ஆப்ஷன்களை தோன்றும். அதில் உங்களுக்கான விருப்பத்தை தேர்வு செய்து சப்மிட் செய்தால் போதும். உங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்போடு இணைத்துவிடலாம். இதற்காக தமிழக மின்வாரியம் சார்பில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை ஏறக்குறைய 70 லட்சம் மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஆதார் – மின்னிணைப்பு தொடர்பாக மக்களுக்கு பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக இலவச 100 யூனிட் மின்சாரம் இனி வழங்கப்படாது எனவும் புகார்கள் எழுந்துள்ளது. அதே நேரத்தில் ஒரு ஆதார் எண்ணையே வீட்டில் உள்ள அனைத்து மின் இணைப்புகளுக்கும் வழங்கலாம் இதனால் எந்த பாதிப்பும் இல்லை எனவும் ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என கூறப்படும் நிலையில் இலவச மின்சாரம் கட்டாயம் ரத்து செய்யப்படாது அப்படி யாரும் அச்சப்பட வேண்டாம் என தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியாக கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் ஆதார் எண்ணை இணைப்பது 100 யூனிட் மின்சாரத்தை நிறுத்து முயற்சி என தமிழக முன்னாள் மின்சார துறை அமைச்சர் நாமக்கல் தங்கமணி கடுமையாக குற்றம் சாட்டி இருக்கிறார். நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மின் கட்டணம் தற்போது ஆறு சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திலும் 6% மின்கட்டணம் உயர்த்த தமிழக அரசின் திட்டமிட்டு இருக்கிறது. அதிமுக ஆட்சி வருடந்தோறும் 6% மின்கட்டணம் உயர்த்தப்பட்டால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர். மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக நாள்தோறும் பல்வேறு அறிவிப்புகள் மின்துறை சார்பில் வெளியிடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைந்திருக்கிறார்கள். இது நிர்வாக திறன் இல்லாத அரசின் முகத்தை காட்டுகிறது.
அதிமுக ஆட்சி காலத்தில் விவசாயத்திற்கு மின் இணைப்புடன் மீட்டர் பொருத்தும் போது எதிர்ப்பு தெரிவித்த திமுக தற்போது எதற்காக மின் இணைப்புடன் மீட்டரை வைத்திருக்கிறார்கள் என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். திமுக தனது நிதிநிலை அறிக்கையில் மின்சார வாரியத்தின் இழப்பை ஈடு செய்வதற்காக 13,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது. ஆனால் தற்போது எதற்காக மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது .ஒரே குடும்பத்தில் இரண்டு மின் இணைப்பு உள்நிலையில் ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்து செய்யப்படும் நிலை இருக்கிறது. இதற்கு நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.