புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்!

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை 2.30 மணி வரை மாமல்லபுரம் அருகில் கரையைக் கடந்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளானாலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலைப் பகுதிகளில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டது. மீனவ கிராமங்கள் அதிகளவில் உள்ள இந்த பகுதிகளில் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடொன்று மோதி சேதமடைந்தன. சில படகுகள் நீரில் மூழ்கின. சென்னையில் 400க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாநகராட்சி ஊழியர்கள், பேரிடர் மீட்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

புயல் பாதிப்பிலிருந்து மக்களை காக்க கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இன்று காலை பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அத்துடன் நிவாரணப் பொருள்களையும் வழங்கினார். மீட்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து வட சென்னை பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்.